ஜடேஜா போட்ட அலேக் 50.. அரண்டு போன நியூசிலாந்து.. ஆர்ப்பரிக்கும் இந்தியா!
Recommended Video
மான்செஸ்டர்: உலககோப்பையின் முக்கியமான அரையிறுதியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா அரை சதம் எட்டி இக்கட்டான நேரத்தில் கைகொடுத்தார்.
உலக கோப்பையின் முதல் அரையிறுதியின் 2ம் நாள் ஆட்டம் (இதை இப்படி சொல்வது தான் சரியாக இருக்கும்... உபயம் - மழை) யாரும் எதிர்பார்க்காத நிலைமையில் உள்ளது. போட்டியில் யாருக்கு வெற்றி என்பதே கணிக்க முடியாத அளவாக உள்ளது.
முதலில் களம் இறங்கி 2 நாட்கள் விளையாடிய நியூசி. இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. எளிதான இலக்கு தான் என்று ரசிகர்கள் ராகம் பாட தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் ரோகித்தும், ராகுலும்.

சொதப்பிய பேட்டிங்
ஆனால் களத்தில் நடந்த கதையே வேறு. எந்த அணியையும் மிரட்டும் டாப் ஆர்டர் பேட்டிங்கை, குருமாவுக்கு இலையில் பிய்த்து போடப்பட்டு காத்திருக்கும் பரோட்டா போன்று நியூசிலாந்து பிய்த்து போட்டது.

எல்லாரும் ஒரு ரன் தான்
ரோகித், ராகுல், கோலி ஆகிய 3 பேரும் எடுத்த ரன்கள் தலா ஒன்று. யாரை இறக்குவது என்ற குழப்பத்திம் மட்டையை கொடுத்து அனுப்பப்பட்ட தினேஷ் கார்த்திக் 6 ரன்களுடன் வெளியேறினார்.

அவுட்டானார் பன்ட்
பாண்டியாவும், பயம் அறியா இளம்கன்று ரிஷப் பன்டும் 32 ரன்களில் ஓரளவு அணியை தூக்கி நிறுத்த முயற்சித்து அவுட்டாகினர். 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்தியாவை காக்க தோனியுடன் களம் இறங்கினார் ஜட்டு என்கிற ஜடேஜா.

தளபதியானார் ஜடேஜோ
தமது தேர்வு சோடை போகவில்லை என்பது அவர் தமது மட்டையை பயன் படுத்தும் போது தெரிந்தது. மிக அழகாக அந்த நெருக்கடியை கையாண்டு நியூசி. பந்தை எதிர்கொண்டு ஆடினார். மறுபுறம் தல தோனி இருக்க, தளபதியாய் ஆட்டத்தை தொடர்ந்தார் ஜடேஜா.

அரைசதம்
இடது கை பேட்ஸ்மென் என்பதால் நியூசி. அணியினர் ஒரு கட்டத்தில் தோனியை விட்டுவிட்டு, ஜடேஜாவை குறி வைத்தனர். ஆனால் அதை எல்லாம் சூ... மந்திரகாளி கணக்காய் ஊதி தள்ளி விட்டு, 42வது ஓவரின் 5வது பந்தில் அரைசதம் கடந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

பதில் சொன்ன ஜடேஜா
50 ரன்களை அடித்துவிட்டு.... வேகமாக ஓடிய அவர் மட்டையை இடது,வலுதுமாக சுழற்றி, சுழற்றி வீசினாரே... யாருக்கோ பதில் சொல்வது போல இருந்தது. சபாஷ் ஜட்டு என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்தது நன்றாகவே தெரிந்தது. காரணம்... உலக கோப்பை அரையிறுதியில் 8வது வீரராக இதுவரை யாரும் அரைசதம் அடிக்க வில்லை என்பது தான்.


Click it and Unblock the Notifications