அடிலெய்டு : இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகத்தில் அடிக்கப்பட்ட சதம் ஏபி டிவில்லியர்ஸ் அடித்தது தான்.
அதைப் போல டி20 போட்டிகளில் அதிவேக சதத்தை கிறிஸ் கெயில் அடித்து இருந்தார்.
இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்க யாராலும் முடியாது என பலரும் எண்ணிய நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் ஒருநாள் போட்டியில் ஜாக் ஃபிரேசர் என்ற வீரர் வெறும் 29 பந்துகளில் சதம் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் சதங்களின் சாதனைகளையும் அடித்து உடைத்து இருக்கிறார்.

இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் நடைபெற்றது. டாஸ்மானியா - சவுத் ஆஸ்திரேலியா இடையிலான இந்தப் போட்டியில் முதலில் டாஸ்மானியா அணி ஆடியது.
அந்த அணியின் காலெப் 90, ஜோர்டன் சில்க் 116 ரன்கள் எடுத்தனர். அனைத்து வீரர்களும் அதிரடியாக ரன் குவித்தனர். அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி ஆடியது சவுத் ஆஸ்திரேலியா. தன் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வெறியில் ஆடிய ஜாக் பிரேஸர் 18 பந்துகளில் எல்லாம் அரைசதம் அடித்தார். தொடர்ந்து பவுண்டரியாக அடித்து மிரட்டினார்.
மூன்றாவது ஓவரில் அவர் செய்த சம்பவம் வெறித்தனமானது. அந்த ஓவரில் 4 சிக்ஸ், 2 ஃபோர் அடித்தார். ஒரே ஓவரில் 32 ரன்கள் கிடைத்தது. 18 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் 7வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து 22 ரன்கள் சேர்த்தார். 9வது ஓவரிலும் 3 சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்த அவர் 29 பந்துகளில் சதம் கடந்தார்.
18 பந்துகளில் அரைசதமும், அடுத்த 11 பந்துகளில் மற்றுமொரு 50 ரன்களை சேர்த்து சதம் கடந்தார் ஜாக். அதன் பின்பும் அடங்காத அவர் 38 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தே ஆட்டமிழந்தார். மொத்தமாக 10 ஃபோர், 13 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் அடித்த 125 ரன்களில் 118 ரன்கள் பவுண்டரியில் மட்டுமே வந்தன.
முன்னதாக உள்ளூர் ஒருநாள் போட்டிகள் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளை அடக்கிய லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிவேக சதம் அடித்து இருந்தவர் ஏபி டிவில்லியர்ஸ். அவர் 31 பந்துகளில் சதம் அடித்து இருந்தார் அதை லிஸ்ட் ஏ போட்டியில் ஆடிய ஜாக் பிரேஸர் முறியடித்து இருக்கிறார்.
அதே போல, டி20 போட்டிகளில் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடும் போது அவர் அந்த சாதனையை செய்து இருந்தார். அதையும் முறியடித்து கிரிக்கெட் உலகிலேயே அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் ஜாக் பிரேஸர்.
அவர் சதம் அடித்த போதும் அவரது அணி தோல்வி அடைந்தது. மற்ற வீரர்கள் அவரைப் போல அதிரடி ஆட்டம் ஆடாமல் விக்கெட்டை பறி கொடுத்தனர். அந்த அணி 398 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.