திருவனந்தபுரம்: ரஞ்சி டிராபி வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட ஆல் ரவுண்டர் சாதனையை செய்த ஜலஜ் சக்சேனாவின் புள்ளிவிவரங்களைப் பார்த்து, "ஐயயோ! இவருக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை?" என்று முன்னாள் தேர்வாளர்களே நேரலையில் ஆச்சரியப்பட்டு, சிரித்து விளையாடியது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜலஜ் சக்சேனா ஆகச் சிறந்த ஃபார்மில் இருந்த காலகட்டத்தில் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா தான் அதுபற்றி பேசி நேரலையில் சிரித்து விளையாடி இருக்கிறார்.
ரஞ்சி டிராபி தொடரின் ஒரு பகுதியாக, கேரளா மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டி திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. மகாராஷ்டிரா அணி, 5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான சரிவைச் சந்தித்தது. 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், 7-வது வீரராகக் களமிறங்கினார் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் ஜாம்பவான், ஜலஜ் சக்சேனா.
அவர் களமிறங்கியபோது, நேரலை ஒளிபரப்பில் சுமார் 7000க்கும் அதிகமான ரன்கள், 450க்கும் அதிகமான விக்கெட்களுடன் அவரது பிரமிக்க வைக்கும் புள்ளிவிவரங்கள் காட்டப்பட்டன. அப்போது, வர்ணனையாளர் அறையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர்களான சேத்தன் சர்மா மற்றும் சலில் அங்கோலா ஆகியோர் பேசியதுதான் சர்ச்சையின் உச்சம்.

சக்சேனாவின் புள்ளிவிவரங்களைப் பார்த்த அங்கோலா, "ஆச்சரியமாக இருக்கிறது! இவருக்கு எப்படி இந்திய அணியில் விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். உடனடியாகக் குறுக்கிட்ட சேத்தன் சர்மா, "சலில், நீங்கள் 'ஆச்சரியம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், நாம் இருவருமே முன்னாள் தேர்வாளர்கள்தான் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்" என்றார்.
அதற்கு அங்கோலா, சிரித்துக்கொண்டே, "ஆனால், நீங்கள்தானே தேர்வுக்குழுத் தலைவர்!" என்று பழியை சேத்தன் சர்மா மீது போட்டார். "ஆமாம், அதனால் நம்மை நோக்கித்தானே விரல்கள் நீட்டப்பட்டிருக்கும்" என்று சேத்தன் சர்மாவும் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
ஒரு சிறந்த ஆல் ரவுண்டரின் கிரிக்கெட் வாழ்க்கையை வீணடித்ததைப் பற்றி எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி, இந்த உரையாடல் முழுவதும், அவர்கள் சிரித்து விளையாடியது, நேரலையில் பதிவானது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான ஜலஜ் சக்சேனா, இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் ஒரு அசைக்க முடியாத ஆல் ரவுண்டராக இருக்கிறார். ரஞ்சி டிராபி வரலாற்றில் 6000 ரன்களுக்கு மேல் அடித்து, 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர் இவர்தான். கபில் தேவ், மதன் லால் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பிறகு, முதல் தரக் கிரிக்கெட்டில் 7000 ரன்களுக்கு மேல் அடித்து, 450 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய நான்காவது இந்தியர் இவரே. 2005-ல் தனது பயணத்தைத் தொடங்கிய ஜலஜ் சக்சேனா 150 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 7060 ரன்களையும், 484 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
சேத்தன் சர்மா 2020 முதல் 2023 வரை தேர்வுக்குழுத் தலைவராகவும், அங்கோலா 2023 முதல் 2024 வரை தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்தனர். சரியாக இந்தக் காலகட்டத்தில்தான், ஜலஜ் சக்சேனா தனது ஆல்-ரவுண்ட் திறமையால் உள்நாட்டு கிரிக்கெட்டில் புயலைக் கிளப்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வயது 33 ஆக இருந்தது.
வயது அடிப்படையில் அந்த காலகட்டம்தான் சக்சேனாவை இந்திய அணிக்கு தேர்வு செய்ய கிடைத்த கடைசி வாய்ப்பாக இருந்தது. அப்போது தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா அதை செய்யவில்லை. அதனால் அதன் பின் ஜலஜ் சக்சேனாவால் எப்போதும் இந்திய அணிக்குள் நுழைய முடியாமல் போய்விட்டது.
ஒரு "லட்டு மாதிரி" வீரரை, கபில் தேவுக்கு நிகரான புள்ளிவிவரங்களைக் கொண்ட ஒருவரை, இந்திய அணிக்குத் தேர்வு செய்யாமல், இப்போது அவரது புள்ளிவிவரங்களைப் பார்த்தே ஆச்சரியப்பட்டு, சிரித்து விளையாடுவது, இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவின் அலட்சியத்தையும், பொறுப்பற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது, ஜலஜ் சக்சேனாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கே ஏற்பட்ட ஒரு பேரிழப்பு என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.