பிர்மிங்காம் : ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் முதல் தர கிரிக்கெட் போட்டியில் 1100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜோ ரூட்டின் அபார சதத்தால், இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

இதில் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 141 ரன்கள் எடுக்க, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி அரைசதம் கடந்தனர். 311 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருந்தது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை முந்திவிடலாம் என எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அபாரமாக நின்று விளையாடி கொண்டிருந்த நிலையில், ஆண்டர்சனின் ஒரு பந்து, போட்டியை தலைக்கீழ மாற்றியது. ஆண்டர்சன் பந்தில் அலெக்ஸ் கேரி போல்ட் ஆனார். இது, முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆண்டர்சன் வீழ்த்திய ஆயிரத்து நூறாவது விக்கெட் ஆகும்.
இதே போன்று ராபின்சன் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி 386 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. தற்போது இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது, இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் வேகமாக விளையாடினாலும், பெரிய இலக்கை தொட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 300 ரன்களுக்கு மேல் குவித்து, ஆஸ்திரேலியாவுக்கு எபலிய இலக்கை கடைசி இன்னிங்சில் கொடுக்கும் உத்வேகத்துடன் ஸ்டோக்ஸ் உள்ளார். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, இங்கிலாந்தை குறைந்த இன்னிங்சில் சுருட்ட முயற்சி செய்து வருகிறது.
கடைசி இன்னிங்சில் பிர்மிங்காம் ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமாகும். அப்போது, மொயின் அலி போன்ற ஸ்பின்னரின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். இதனை தான், இந்திய அணி அஸ்வின் விஷ்யத்தில் கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.