ஒரே பவுலர்.. 7 முறை அதே "சம்பவம்".. "கலங்கிய" No.1 பேட்ஸ்மேன் - இந்தியாவுக்கான எச்சரிக்கையா?
லண்டன்: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே, சென்னை வெயிலைப் போல டெஸ்ட் போட்டி சூடு பிடித்துவிட்டது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன்.2) தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணியில், டிரெண்ட் போல்ட் அணியில் சேர்க்கப்படவில்லை. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரு விக்கெட் கூட
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியில் டாம் லாதம், டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நல்ல பார்ட்னர்ஷிப் எனலாம். இன்னும் சொல்லப்போனால் நீட் பார்ட்னர்ஷிப். இதில், முதல் நாள் ஆட்டத்தின் முதல் 'ட்ரிங்க்ஸ்' இடைவேளை வரை, இங்கிலாந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருந்தது.

முதல் விக்கெட்
அதேசமயம், போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலே ராபின்சன், தொடக்க வீரர் டாம் லாதமை போல்டாக்கினார். ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வந்த பந்தை டிஃபன்ஸ் ஆட முயன்ற போது, பந்து இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார். இதன் மூலம், தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்தும் முதல் விக்கெட்டை இழந்தது. அப்போது ஸ்கோர் 58-1

7வது முறை
இதனையடுத்து, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 33 பந்துகளை சந்தித்து 13 ரன்களை எடுத்திருந்த வில்லியம்சன், சீனியர் பவுலர் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்டானார். இவருக்கும் எமனாக அமைந்தது இன்சைட் எட்ஜ் தான். மிக பொறுமையாக ஷாட் ஆடியதால், பந்து இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இந்த விக்கெட்டோடு சேர்த்து டெஸ்ட் போட்டிகளில், 7வது முறையாக, உலகின் நம்பர்.1 டெஸ்ட் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சனை வீழ்த்தியிருக்கிறார் ஜேமி ஆண்டர்சன்.

குக் சாதனை சமன்
மேலும், 18 வருடங்களுக்கு முன்பு, அதாவது 2003ம் ஆண்டு இதே லார்ட்ஸ் மைதானத்தில் இளம் வீரனாக களமிறங்கிய ஆண்டர்சன், இத்தனை ஆண்டுகள் கழித்து, மீண்டும் அதே லார்ட்ஸில் பந்து வீசுகிறார். விக்கெட்டும் எடுக்கிறார். ஒரு பவுலர் இத்தனை ஆண்டுகாலம் தாக்குப்பிடித்து என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அதுமட்டுமின்றி இப்போட்டி ஆண்டர்சனின் 161வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம், இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் மேட்சுகளில் ஆடிய அலைஸ்டர் குக் சாதனையை ஆண்டர்சன் சமன் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்திய அணி இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும் நிலையில், ஆண்டர்சனின் அட்டகாசமான பவுலிங் ஃபார்ம், நிச்சயம் கோலி படைக்கு தலைவலியாக அமையலாம்.


Click it and Unblock the Notifications