"அவர் இருக்கும் வரை பாகிஸ்தான் டீம் உருப்படாது..".. கிழித்து தொங்கவிட்ட ஆஸ்திரேலிய வீரர் கில்லெஸ்பி
சிட்னி: பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகக் கடந்த 2024-ல் குறுகிய காலம் பணியாற்றிவிட்டு விலகிய ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய சீரழிவுக்கு ஆகிப் ஜாவேத் தான் காரணம் என்று கடுமையாகச் சாடியுள்ளார். அவதூறுகள் மற்றும் அதிகார மீறல்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்ந்து பின்னோக்கிச் செல்வதாக அவர் பேசி இருக்கிறார்.
இது குறித்து கில்லெஸ்பி அளித்துள்ள பேட்டியில், "பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது எனது நெஞ்சம் வலிக்கிறது. அங்கு அனைத்தும் குளறுபடியாக உள்ளது. இதன் பின்னணியில் உள்ள முக்கியப் பிரச்சனை யார் என்பது எனக்குத் தெரியும். அது ஆகிப் ஜாவேத் தான். அவரே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம். அவர் அந்தப் பதவியில் இருக்கும் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்ந்து பின்னோக்கியே செல்லும்" என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி மற்றும் அதிகாரிகள் அணித் தேர்வில் தலையிடுவதை விமர்சித்த அவர், "கிரிக்கெட் தெரிந்த நபர்களிடம் இருந்து பாகிஸ்தானுக்கு வலுவான தலைமை தேவைப்படுகிறது. தகுதியான பயிற்சியாளர்களை நியமித்து, அணியின் தலைமையை அவர்களே முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, மேஜை நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் வாரியத் தலைவரும் அதிகாரிகளும் கேப்டனை தேர்ந்தெடுப்பது முற்றிலும் முட்டாள்தனமானது.
சரியான பயிற்சியாளரைத் தேர்வு செய்து, அங்குள்ள பிரச்சனைகள் ஓய்வதற்கு அவருக்குப் போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். அதன் பிறகு, கேப்டனைத் தேர்வு செய்ய அவரிடம் முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும். அங்கிருந்துதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். ஆனால், தற்போதைய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் எங்கும் செல்லாமல் முடங்கிக் கிடக்கிறது" என்று கூறினார்.
மேலும், அங்கு தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் குறித்துப் பேசிய கில்லெஸ்பி, "பாகிஸ்தான் வாரியத்தில் எனக்குக் கிடைத்த அனுபவம் என்னை முற்றிலுமாகச் சோர்வடையச் செய்தது. பயிற்சியாளர் பணியின் மீதே எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இது என்னை மனரீதியாகப் பாதித்து, என் மீது எனக்கே சந்தேகத்தை உண்டாக்கியது. கிரிக்கெட்டில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எனக்குள் எழுப்பியது. நான் அங்கு முற்றிலும் அவமதிக்கப்பட்டேன். எனது அதிகாரம் பறிக்கப்பட்டது. இதற்கு முழுக்க முழுக்க ஆகிப் ஜாவேத் தான் காரணம்" என்று குற்றம் சாட்டினார்.
ஆகிப் ஜாவேத்துடனான தனது முதல் சந்திப்பு குறித்துப் பேசிய கில்லெஸ்பி, "எங்கள் முதல் சந்திப்பிலேயே, தான் தான் எல்லாவற்றிற்கும் அதிகாரி என்பதைக் காட்டுவதற்காக அவர் வீம்போடும், பந்தாவோடும் உள்ளே வந்தார். 'இதைத்தான் நாம் செய்ய வேண்டும்' என்று அவர் கூறினார். நான் அதைக் கேட்டு 'சரி' என்றேன். ஆனால் இது தொடர்ந்து கொண்டே இருந்தது. அவரது ஒரு சில கருத்துகளுக்கு நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். அவர் ஏற்கனவே என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால், எங்களுக்குள் எந்தவித ஒத்துழைப்பும் இருக்காது என்பதை அந்த கணத்திலேயே நான் உணர்ந்து கொண்டேன்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications

