“15 வருசம் கிரிக்கெட் ஆடணும்னா ஐபிஎல்-ஐ விட்ருங்க ஏன்னா”.. ஜவகல் ஸ்ரீநாத் இளம் வீரர்களுக்கு அட்வைஸ்
மும்பை: இளம் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கூறி இருக்கிறார். மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "ஐபிஎல் தொடர் முக்கியமானது தான். ஆனால், கிரிக்கெட்டிற்குத் தேவையான ஆழமான திறமை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கிடைக்கும். ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தான் அனைத்து கிரிக்கெட்டுக்கும் தாய் போன்றது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு டி20 போட்டிகளில் விளையாடுவது எளிது. ஆனால், டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது அவ்வளவு எளிதானதல்ல" என்று கூறினார்.

மேலும், "தற்போதைய இளம் வீரர்கள் ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளின் விளம்பர வெளிச்சத்திற்கு எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்களது குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். நீங்கள் 15 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர விரும்பினால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். டி20 போட்டிகளில் வீரர்கள் மிக விரைவாக மாற்றப்படுகிறார்கள்" என்றும் எச்சரித்தார் ஸ்ரீநாத்.
ஜாகீர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு முந்தைய காலகட்டத்தில் இந்திய அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஜவகல் ஸ்ரீநாத். கடந்த 1991 முதல் 2002 வரை இந்திய அணிக்காக விளையாடிய அவர், 67 டெஸ்ட் போட்டிகளில் 10 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது உட்பட மொத்தம் 236 விக்கெட்டுகளையும், 229 ஒருநாள் போட்டிகளில் 315 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக 296 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 551 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள ஜவகல் ஸ்ரீநாத், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைத் தற்போதும் தக்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
