துபாய்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் பலியான சம்பவம், கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த "கோழைத்தனமான தாக்குதலுக்கு" சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகியவை மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. மேலும், இந்தத் துயரமான நேரத்தில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (ACB) முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது, பாகிஸ்தானுக்கு ஒரு மறைமுக அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் ஜெய் ஷா, தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். "மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான கபீர் அகா, சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகியோரின் கனவுகள், ஒரு அர்த்தமற்ற வன்முறைச் செயலால் சிதைக்கப்பட்டதைக் கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன்."
"இத்தகைய திறமையான வீரர்களின் இழப்பு, ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்குமே ஒரு பேரிழப்பாகும். இந்த இதயத்தை நொறுக்கும் இழப்பால் துயருற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனும், அனைவருடனும் நாங்கள் துணை நிற்கிறோம்" என்று ஜெய் ஷா பதிவிட்டுள்ளார்.

ஐசிசி-யைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பக்திகா மாகாணத்தில் நடந்த கோழைத்தனமான எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல்களில், மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான கபீர் அகா, சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகியோர் உயிரிழந்ததற்கு பிசிசிஐ தனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில், பிசிசிஐ, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் சமூகம் மற்றும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுடன் துணை நிற்கிறது. இந்த கோரமான மற்றும் தேவையற்ற தாக்குதலை பிசிசிஐ வன்மையாகக் கண்டிக்கிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய எல்லை மீறிய, அமைதி ஒப்பந்தத்தை மீறிய தாக்குதலில், மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த "கோழைத்தனமான தாக்குதலுக்கு" கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB), உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பாகிஸ்தான், இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தது.
ஐசிசி தலைவர் மற்றும் பிசிசிஐ ஆகிய இரண்டும், பாகிஸ்தானின் செயலைக் கடுமையாகக் கண்டித்து, ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது, இந்த விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு செக்: கிரிக்கெட் உலகில் பெரும் சக்தி வாய்ந்த அமைப்புகளான ஐசிசி மற்றும் பிசிசிஐ, பாகிஸ்தானுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பது, அந்த நாட்டின் மீது ஒரு சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும்.
ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு: போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஆதரவு தெரிவித்திருப்பது, அவர்களுக்கு ஒரு பெரும் தார்மீக பலத்தைக் கொடுக்கும். ரஷித் கான், முகமது நபி உள்ளிட்ட பல ஆப்கானிஸ்தான் வீரர்களும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.