துபாய் : ஐசிசி தலைவராக ஜெய்ஷா இன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்று கொண்டார். ஜெய்ஷா ஆறு ஆண்டு காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 36 வயதான ஜெய்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐசிசி தலைவராக போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷா முதன் முதலாக பதவியேற்றார். அதன் பிறகு ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவராக இருந்த ஜெய்ஷா தற்போது ஐசிசி தலைவராக பதவி வகிக்கிறார். இதன் மூலம் ஜகன்மோகன் டால்மியா, சரத் பவார், சீனிவாசன், சஷ்ஷாந்த் மனோகர் ஆகியோருக்கு பிறகு இந்த பதவிக்கு வரும் ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றிருக்கிறார்.

ஐசிசி தலைவராக பதவி ஏற்ற பின் ஜெய்ஷா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ஐசிசி தலைவராக பதவி ஏற்றிருப்பதை பெருமையாக கருதுகின்றேன். எனக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர் நாடுகள் மற்றும் மற்ற முக்கிய நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நமது கிரிக்கெட் வரும் 2028 ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற இருக்கிறது.இது கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல காலம். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு கிரிக்கெட்டை கொண்டு செல்ல முயற்சி செய்வேன். அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் விளையாட்டை உருவாக்குவதே எனது லட்சியம். தற்போது பலவிதமான கிரிக்கெட் போட்டிகள் ஒரே சமயத்தில் நடைபெறுகிறது. அது மட்டுமில்லாமல் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும்.
கிரிக்கெட் உலக அளவில் பெரும் வளர்ச்சியை நோக்கி செல்லும் திறன் இருக்கிறது. ஐசிசி குழு மற்றும் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்துடன் இருக்கின்றேன். கிரிக்கெட்டை மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்ல நான் முயற்சி செய்வேன். கடந்த நான்கு ஆண்டுகளாக ஐசிசி தலைவராக சிறப்பாக செயல்பட்ட கிரேக் பார்க்லேவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அவருடைய காலத்தில் பல மைல்களை ஐசிசி எட்டியிருக்கிறது. மற்ற உறுப்பினர்கள் நாட்டுக்கும் கிரிக்கெட்டை கொண்டு செல்வதை என்னுடைய முதல் பணியாக இருக்கும் என ஜெய்ஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.