தரம்சாலா : 2023 உலகக்கோப்பை தொடரை இந்தியாவின் கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ எடுத்து நடத்த உள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் மிக பிரம்மாண்டமாக உலகக்கோப்பை தொடரை நடத்த பிசிசிஐ ஏற்படுகளை செய்து வருகிறது.

உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகள் கூட விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் அவுட்பீல்டில் பூஞ்சைகள் அதிக அளவில் இருப்பதை ஐசிசி அதிகாரி கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார். இது உலகக்கோப்பை தொடருக்கு சிக்கலாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்த தகவலை அறிந்து பதறி இருக்கிறார். உடனடியாக சரி செய்யுமாறு தரம்சாலா மைதான அதிகாரிகளுக்கு அவர் கூறி இருக்கிறார். மறுபுறம், ஐசிசிக்கு பிசிசிஐ அனுப்பி உள்ள பதிலில் உலகக்கோப்பை துவங்கும் முன் இந்த பிரச்சனையை சரி செய்து விடுகிறோம் என கூறி உள்ளது.
வரும் செப்டம்பர் 20ஆம் தேதி பிசிசிஐ அதிகாரிகள் அங்கே மீண்டும் சோதனை செய்ய உள்ளனர். அப்போது ஜெய் ஷாவும் அங்கே செல்வார் என கூறப்படுகிறது. ஏற்கனவே, டிக்கெட்கள் விற்கப்பட்டு இருப்பதால் ஐசிசி இங்கே போட்டி நடத்த அனுமதி அளிக்கவில்லை என்றால் பிசிசிஐக்கு பெரிய தலைவலியாகி விடும்.

பொதுவாக உலகக்கோப்பை போன்ற ஐசிசி நடத்தும் தொடர்களுக்கு அவர்களே போட்டி நடக்கும் மைதானங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். அனைத்து அணிகளுக்கும் உகந்த சூழ்நிலை மற்றும் பாதி தொடரில் ஏதும் சிக்கல்கள் ஏற்படாத நிலை இருந்தால் மட்டுமே ஐசிசி தொடரை நடத்த அனுமதிக்கும். எனினும், இதுவரை அப்படி ஒரு மோசமான நிலை எந்த தொடருக்கும் ஏற்பட்டதில்லை.
தற்போது அக்டோபர் 5ஆம் தேதி உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்னும் 20 நாட்களுக்குள் அங்கிருக்கும் பூஞ்சை பிரச்சனைக்கு முடிவு கட்டியாக வேண்டும். பணக்கார அமைப்பான பிசிசிஐ பணத்தை இறைத்து மைதானத்தை சரி செய்து விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.