ஆஹா.. வந்துருட்டாருய்யா.. ஜூலன் கோஸ்வாமி வந்துட்டாருய்யா!
டெல்லி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உடனான முத்தரப்பு டி-20 போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியில் அனுபவம் உள்ள சீனியர் ஜூலான் கோஸ்வாமி இடம்பெற்றுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடர், வதோதராவில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று நடக்க உள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 போட்டித் தொடர் மும்பையில் நடக்க உள்ளது.
இம்மாதம் 22ல் துவங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகின்றது. ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளன. இறுதிப் போட்டி, 31ம் தேதி நடக்க உள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்கத் தொடரின்போது காயம் காரணமாக விலகிய அணியின் சீனியரான ஜூலான் கோஸ்வாமி, முத்தரப்பு தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
17 வயதாகும் அதிரடி பேட்ஸ்மேன் ஜெமிமா ரோட்ரிகுஸ் மற்றும், 18 வயதாகும் வேகப்பந்து வீச்சாளரான பூஜா வஸ்த்ராகரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத் தவிர, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கும் இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு போட்டியில் விளையாட உள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமிமா ரோட்ரிகுஸ், அனுஜா படேல், தீப்தி சர்மா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதம், ஏக்தா பிஸ்த், ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ராகர், ருமேரி தர், மோனா மேஷ்ரம்.
Story first published: Thursday, March 15, 2018, 10:16 [IST]
Other articles published on Mar 15, 2018


Click it and Unblock the Notifications