IND vs ENG: 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கணும்.. ஆனா நடந்ததே வேற.. தவிக்க விட்ட ஜோ ரூட், டாவ்சன்
பர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயானமுதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி இருக்க வேண்டும். ஆனால் 200 ரன்களுக்கும் மேல் குவித்து வலுவான ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இந்திய அணி 19 ரன்கள் இடைவெளியில் முதல் 5 விக்கெட்களை வீழ்த்தியது. ஆனால், அதன் பின் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் ஜோ ரூட் மற்றும் ஆல்-ரவுண்டர் லியாம் டாவ்சன் போட்டியை இங்கிலாந்து பக்கம் கொண்டு சென்றனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. முதல் 7 ஓவர்கள் வரை ஆமை வேகத்தில் ஆடி 20 ரன்கள் மட்டுமே சேர்த்த இங்கிலாந்து அணி அதன் பின் வேகம் எடுத்தது. 12 ஓவர்களில் 55 ரன்களை கடந்து ஆடி வந்தது. அப்போது 61 ரன் எடுத்த நிலையில் முதல் விக்கெட் வீழ்ந்தது.

இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் குர்னூர் பிரார் பந்துவீச்சில் 31 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் 45 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் அதே பிரார் ஓவரில் வெளியேறினார். அடுத்து இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. பின்னர் பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஜோஸ் பட்லர் மற்றும் சாம் கர்ரன் ஆட்டமிழந்தனர்.
61 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து அணி 80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. எப்படியும் 150 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆகி விடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் லியாம் டாவ்சன் நீண்ட நேரம் விக்கெட்டை தற்காத்து நிதானமாக ரன் சேர்த்தனர்.
ஒரு கட்டத்துக்கு பிறகு லியாம் டாவ்சன் சற்று வேகம் எடுத்து அரைசதம் கடந்தார். அனுபவ வீரர் ஜோ ரூட்டும் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 220 ரன்களை தாண்டியது. பின்னர் டாவ்சன் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் 83 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் - டாவ்சன் கூட்டணி 6வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது.
இவர்கள் ஆட்டத்தால் இந்திய அணிக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது. அதன் பின்னர் விக்கெட்கள் வேகமாக சரிந்தன. ஜோ ரூட் மட்டும் விக்கெட் இழக்காமல் இருந்தார். 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. பிட்ச் பேட்டிங் செய்ய சவாலாக இருந்த நிலையில் இந்திய அணிக்கு 259 ரன்கள் என்ற இலக்கு கடினமாகவே இருக்கும்.
இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினார். குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். சிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications
