ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்து எறிந்த ஜோ ரூட்.. சொந்த மண்ணில் ரெக்கார்டு
லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், சொந்த மண்ணில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் வரலாற்று சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக ரன் குவித்தவராக இருக்கும் ஜோ ரூட் ஒவ்வொரு போட்டியிலும் பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து வருகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது ஜோ ரூட் இந்த மைல்கல்லை எட்டினார். இந்தப் போட்டிக்கு முன்பாக, சொந்த மண்ணில் பாண்டிங்கின் 7,578 ரன்கள் சாதனையை முறியடிக்க ரூட்டிற்கு 13 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் 4 ரன்களும், நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது இன்னிங்ஸில் 24 ரன்களும் எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையைத் தகர்த்தார்.

ஆஸ்திரேலியாவில் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரிக்கி பாண்டிங் தனது 17 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையில் 7,578 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஜோ ரூட் தனது 89வது உள்நாட்டு டெஸ்ட் போட்டியிலேயே 7,591 ரன்களைக் கடந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 7,216 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில், இந்த இன்னிங்ஸில் ஜோ ரூட் அரைசதம் அடித்திருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை அவர் முறியடித்திருப்பார். தற்போது இரு வீரர்களும் தலா 68 அரைசதங்களுடன் சமநிலையில் உள்ளனர்.
அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஜோ ரூட் மேலும் 72 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் 12,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் உலகின் 6வது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். சர்வதேச அளவில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் (14,192 ரன்கள்) எடுத்த சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
