பாரிஸ் பந்து வீச்சு பப்பரப்பான்னு போச்சு.. போலன்டுக்கும் பொங்கல் வைத்தது இந்தியா!
பெர்த்: பயங்கரமாக பேசப்பட்ட புதுமுக பந்து வீச்சாளர் ஜோயல் பாரிஸ் பந்து வீச்சை இந்திய வீரர்கள் இன்று பொளந்து கட்டி விட்டனர். அடித்து நொறுக்கி அப்பளம் போல ஊதித் தள்ளி விட்டனர் அவரது பந்துகளை. அதேபோல இன்னொரு வேகப் பந்து வீச்சாளரான போலன்ட்டையும் இந்திய வீரர்கள் பிரித்து மேய்ந்து விட்டனர்.

ஆஸ்திரேலிய அணியில் இன்று அறிமுகமான வேகப் பந்து வீச்சாளர்தான் பாரிஸ். இன்னொருவர் போலன்ட். மெக்கிராத் ரேஞ்சுக்கு ஓவர் பில்ட்டப்பாக பேசி வந்தனர் இவர்களை.
ஆனால் இருவருமே இன்று எடுபடவில்லை. அடித்து பிரித்து விட்டனர் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மாவும், விராத் கோஹ்லியும். பாரிஸ் பந்து வீச்சை ஆரம்பம் முதலே ரோஹித் நையப்புடைத்து விட்டார். 8 ஓவர்களோடு அவரை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது. 8 ஓவர்கள் வீசிய பாரிஸ், 53 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. அவரது சராசரி 6.6 ஆகும்.
மறுபக்கம் போலன்ட் ரொம்ப மோசம். ஆரம்பத்தில் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு வீசிய அவர் பின்னர் சொதப்பினார். 10 ஓவர்கள் வீச இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விட்டுக் கொடுத்ததோ 74 ரன்கள், இவருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை.

மொத்தத்தில் இன்று ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை இந்திய வீரர்கள் பிரித்து எடுத்து விட்டனர். உள்ளூர் போட்டிகளில் ஆடுவது போல படு கேஷுவலாக இந்திய வீரர்கள் ஆடியது ரசிகர்களை குஷிப்படுத்தியது. கடைசி ஓவர்களை இந்திய வீரர்கள் பிரித்து மேய்ந்தது ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தது.
மேலும் பெரிதாக பேசப்பட்ட, பாரிஸ் மற்றும் போலன்ட் பந்து வீச்சை இந்தியா தவிடு பொடியாக்கி நிலை குலைய வைத்தது கூடுதல் சந்தோஷமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications