ஸ்மித்துக்கு பதிலாக வந்தியா..? இந்தா வாங்கிக்க...! மீண்டும் ஒரு அடியை போட்டு அனுப்பிய ஆர்ச்சர்..!
லண்டன்: ஸ்மித்துக்கு பதிலாக களமிறங்கிய மாற்று வீரருக்கும் தமது பவுலிங்கால் அடியை போட்டு அனுப்பி இருக்கிறார் ஜோப்ரா ஆர்ச்சர்.
ஆஷஸ் தொடரின் 2வது போட்டி டிராவானது. லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்சரால், ஸ்மித்துக்கு பின் கழுத்தில் அடிபட்டது. அதனால் அவரால் 2வது இன்னிங்ஸில் ஆட முடிய வில்லை.
எனவே 2வது இன்னிங்ஸில் அவருக்கு பதிலாக லாபஸ்சாக்னே பேட்டிங் ஆடினார். முன்பு வீரர்கள் காயம் என்றால் பீல்டிங் செய்ய மட்டுமே மாற்று வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர். இந்த நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய விதியை கடந்த மாதம் அமல்படுத்தியது.

மாற்று வீரர் முறை
அவ்வகையில் ஆட்டத்தின் நடுவே தலையில் பந்து தாக்கி காயமடைந்தவருக்கு பதிலாக முழுநேர மாற்று வீரரை ஒரு அணி தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும் அவர் பீல்டிங் மட்டுமல்லாது பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் தனது முழு பங்களிப்பை அளிக்க இயலும்.

முதல்முறை அறிமுகம்
அந்த விதி இந்த டெஸ்டில் அமல்படுத்தப்பட்டது. முதன்முறையாக மாற்று வீரர் பேட்ஸ்மேனாக இறங்கியது மார்ஸ் லாம்பஷே. துபோன்ற நடைமுறை 142 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதன்முறை. ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக களமிறங்கிய லாம்பஷே 59 ரன்கள் சேர்த்து ஆஸி. அணி 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை டிரா செய்ய முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

அடியை போட்ட ஆர்ச்சர்
இது ஒருபுறம் இருக்க... ஸ்மித்திற்கு அடியை போட்டு அனுப்பிய ஆர்ச்சர், அவருக்கு மாற்றாக வந்த லாம்பஷேவுக்கும் ஒரு பவுன்சரை போட்டார். வார்னரும் கவாஜாவும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 6வது ஓவரிலேயே களத்திற்கு வந்தார் லாம்பஷே.
பவுன்சர் அடி
லாம்பஷே எதிர்கொண்ட முதல் பந்தே பவுன்ஸர் தான். ஆர்ச்சர் அதிவேகமாக வீசிய அந்த பவுன்சர் ஹெல்மெட்டில் பலமாக அடித்தது. முகத்துக்கு நேராக அடித்ததால் உடனடியாக பிசியோதெரபிஸ்ட் ஓடி வந்து பரிசோதித்தார். ஆனால் எந்த பிரச்னையும் இல்லை என்பதால் லாம்பஷே தொடர்ந்து பேட்டிங் செய்தார்.


Click it and Unblock the Notifications