மான்செஸ்டர் : ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்காவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 317 ரன்களில் சுருட்டியது.
இதில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் மற்றும் மார்க் லாபஸ்சேம் அதிகபட்சமாக தலா 51 ரன்கள் சேர்த்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இதில் தொடக்க வீரர் பென் டக்கட் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க மோயின் அலி ஜாக் கிராலி ஜோடி அபாரமாக விளையாடியது. இதில் மோயின் அலி 54 ரன்களில் ஆட்டம் இழக்க கிராலி 189 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் 84 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் 384 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. இதில் இந்த தொடர் முழுவதும் தடுமாறிய ஹாரி புருக் 61 ரன்கள் சேர்த்தார்.
இதனை அடுத்து கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பாரிஸ்டோ ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களில் வெளியேற ஜானி பாரிஸ்டோ தனி ஆளாக விளையாடிக் கொண்டிருந்தார். எனினும் அவருக்கு மற்ற வீரர்கள் துணை நிற்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். ஜானி பாரிஸ்டோ சதம் அருகே வந்த நிலையில் கடைசி விக்கெட்டுக்கு அவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பாரிஸ்டோ தனது சதத்தை பூர்த்தி செய்ய கடுமையாக போராடினார். ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசி விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்க பாரிஸ் டோ 99 ரன்களில் கடைசி வரை களத்தில் நின்று ஒரு ரன்னில் சதத்தை மிஸ் செய்தார். மற்ற வீரர்கள் துணை நிற்காமல் வெளியேறியதால், சதத்தை மிஸ் செய்ய வேண்டிய நிலைமை பாரிஸ்டோவுக்கு ஏற்பட்டது.
81 பந்துகளில் 99 ரன்கள் குவித்த பாரிஸ்டோ 10 பவுண்டரிகளையும் நான்கு சிக்ஸர்களையும் விளாசினார். இதனை அடுத்து 272 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் உள்ளதால் ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணி வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியை பெற முயற்சிக்கிறது.