பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த பல வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் மீண்டும் விளையாட வர மாட்டார்கள் என்ற செய்திகள் சில நாட்களாக வெளியாகியிருந்தன. அதனால் ஐபிஎல் அணிகள் பாதிக்கப்படும் நிலை இருந்தது. குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் விலகும் சூழ்நிலை இருந்தது.
தற்போது அந்த வெளிநாட்டு வீரர்களில் முக்கியமானவரான ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், மீண்டும் ஆர்சிபி அணிக்குத் திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்குத் தோள்பட்டையில் லேசான காயம் இருந்தது. மேலும், அவர் ஜூன் 11 அன்று தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். எனவே, அவர் தற்போது ஓய்வு எடுத்துவிட்டு அந்த முக்கியமான இறுதிப் போட்டியில் விளையாடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். இது ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
2025 ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் மே 17 முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை நடந்த தொடரில் சிறப்பாக ஆடிய அணிகளில் ஒன்றாக இருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணி தற்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நிச்சயமாக பிளேஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறும் என்ற நிலை உள்ளது. இந்த ஆண்டு அந்த அணி வலுவான நிலையில் இருப்பதால், கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில்தான் ஜோஷ் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என்ற பரபரப்பு இருந்தது. ஆனால், அவர் தற்போது மீண்டும் ஆர்சிபி அணிக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் விரலில் ஏற்பட்ட காயத்தால் சில போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருந்தார். ஆனால், தற்போது ஏற்பட்ட ஐபிஎல் நிறுத்தம் அவருக்கு உதவியுள்ளது. அவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடும் முதல் போட்டியிலேயே பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.