நல்ல வேலை ராகுல் விளையாடல.. இல்லனா கிரிக்கெட் வாழ்க்கை சமாதி ஆயிருக்கும்.. ஸ்ரீகாந்த் பரபர பேச்சு
சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி தழுவியது குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய ஸ்ரீகாந்த் ஆஸ்திரேலியா விளையாடிய விகிதத்திற்கு நாம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஸ்மித் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை வீழ்த்தி இருப்பதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். மேலும் ஆடுகளம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பார்ப்பதில்லை
இது தொடர்பாக பேசிய அவர், இந்தூர் ஆடுகளம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மோசமான விளம்பரம். இந்தியாவில் யாரும் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதில்லை. இப்படி எல்லாம் ஆடுகளத்தை வைத்தால் யார் தான் பார்ப்பார்கள். போட்டி மூன்று நாட்களுக்குள் முடிவடைந்து விடுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் என்றால் ஐந்து நாட்கள் தானே நடக்க வேண்டும். இதனால் தான் மக்கள் தற்போது ஐபிஎல் பக்கம் சென்று விட்டார்கள்.

யாராலும் முடியாது
நானே இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதில்லை. இந்த ஆடுகளம் முதல் ஓவரிலே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படுகிறது. பந்து கணிக்க முடியாத அளவிற்கு திரும்பினால் யாரால் தான் சரியாக பேட்டிங் செய்ய முடியும். எந்த கொம்பன் நினைத்தாலும் இந்த ஆடுகளத்தில் சரியாக விளையாட முடியாது. அதற்காக இந்திய அணி 109 ரன்கள் ஆட்டம் இழந்ததை நான் ஆதரவு அளிக்கவில்லை.அது இந்தியாவின் பைத்தியக்காரத்தனம் என்றுதான் நான் சொல்வேன். நிச்சயமாக 200 ரன்கள் அடித்திருக்கலாம்.

பலவீனம்
ஆனால் 109 ரன்கள் அடித்திருப்பது இந்தியாவின் பேட்டிங் பலவீனத்தை காட்டுகிறது. எப்போதும் அக்சர்பட்டேல்,ஜடேஜா, அஸ்வின் ஆகிய மூன்று பேரும் இந்திய அணியை காப்பாற்றி நல்ல இலக்குக்கு கொண்டு செல்வார்கள். இன்று அவர்கள் சரியாக விளையாடாததால் இந்திய அணியின் பலவீனம் தற்போது வெளியே தெரிந்து விட்டது.இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா விளையாடிய விதம் பாராட்டத்தக்கது. இதேபோன்று முதல் இன்னிங்ஸில் இரண்டு பேர் ஆடி இருந்தாலே ஆட்டத்தின் முடிவே மாறி இருக்கும்.

கடவுள் காப்பாற்றினார்
நான் கே எல் ராகுலை நினைத்து தான் சந்தோஷப்படுகிறேன். நல்லவேளை அவர் இந்த ஆடுகளத்தில் விளையாடவில்லை. அப்படி இந்தியா அவரை விளையாட சொல்லி இருந்தால் நிச்சயமாக அவர் சொற்பரன்களில் ஆட்டம் இருந்திருப்பார். அத்துடன் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை சமாதியாக இருக்கும்.பேட்டிற்கும் பந்திற்கும் சமநிலை இருக்கும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும். இல்லையெனில் விராட் கோலி கூட இந்த ஆடுகளத்தில் ரன் எடுக்க முடியாது. இந்த ஆடுகளத்தில் 7 விக்கெட் எடுப்பதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது.

நியாயம் இல்லை
நான் பந்து வீசி இருந்தாலே 5 விக்கெட்டுகளை எடுத்து இருப்பேன். அஸ்வின் அடித்து ஆடினால் அவருக்கு கை இழுத்துக் கொள்கிறது. அதன்பிறகு பந்து வீச தடுமாறி வருகிறார். எனினும் இரண்டாவது நாள் ஆட்டத்தில் அவர் மூன்று விக்கெட் எடுத்தாலும் ஜடேஜா தான் நன்றாக பந்து வீசி இருந்தார். ஆஸ்திரேலிய வீரர்களும் இந்த ஆடுகளத்தில் பேட்டிங்கில் சொதப்பினார்கள். இதனால் பேட்ஸ்மேன்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார் .


Click it and Unblock the Notifications