டிவில்லியர்ஸோட சாதனையை தூக்கியடிச்சு விரட்டிய 'குட்டிப் புலி'...!
ஜோஹன்னஸ்பர்க்: சுகிசோ ரபதா. 21 வயதேயான இந்த இளம் புயல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டைக் கலக்க வருகிறார். சர்வதேச அளவில் இவரது பங்கு மிகப் பெரிதாக வரும் நாட்களில் இருக்கும் என்பதை நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரபதா ஒரு அற்புதமான வேகப் பந்து வீச்சாளர். அடுத்தடுத்து முத்திரை பதித்து வருகிறார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வழங்கும் விருது விழாவில் ஆறு விருதுகளை அள்ளி புதிய சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்கா வழங்கி வரும் இந்த விருதுகளை இதுவரை யாரும் இந்த அளவுக்கு அதிக அளவில் வென்றதில்லை என்பதால் ரபதா புதிய வரலாறு படைத்துள்ளார்.

என்னென்ன?
இந்த ஆண்டுக்கான சிறந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நாள் வீரர், வீரர்களின் விருப்பத் தேர்வு, ரசிகர்களின் விருப்பத் தேர்வு, சிறந்த பந்து வீச்சு ஆகிய விருதுகளை அள்ளியுள்ளார் ரபதா.

முதல் வீரர்
இதுவரை எந்த வீரரும் இவ்வளவு அதிகமான விருதுகளை வென்றதில்லை. இதற்கு முன்பு ஏப் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா ஆகியோர் ஐந்து விருதுகள் வரை வென்றுள்ளனர். ஆனால் அவர்களை விட ரபதா வயதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்திற்கு எதிராக
வங்கதேசத்திற்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார் ரபதா. அப்போட்டியில் அவர் 6 விக்கெட்களைச் சாய்த்து அதிர வைத்தார். அதே ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா வெல்லவும் ரபதா முக்கியக் காரணமாக அமைந்தார்.

டோணிக்கு ஆட்டம் காட்டியவர்
அந்த தொடரில் கான்பூரில் நடந்த போட்டியில் கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. டோணி களத்தில் இருந்தார். ஆனால் ரபதா புத்திசாலித்தனமாக பந்து வீசி வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி தேடித் தந்தார்.

புள்ளிவிவரம்
இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களையும், 20 ஒரு நாள் போட்டிகளில் 37, 16 டி20 போட்டிகளில் 22 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் ரபதா.


Click it and Unblock the Notifications