டிஎன்பிஎல் 2019: தூத்துக்குடி பேட்ரியாட்சை 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற காஞ்சி வீரன்ஸ்
Recommended Video
நெல்லை: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றிபெற்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தூத்துக்குடி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் வைத்யா மற்றும் சித்தார்த் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் விஷால் வைத்யா 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து சித்தார்த்துடன், கேப்டன் பாபா அபாராஜித் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் அதிரடி ஆட்டத்தால் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

அதிரடி அரைசதம்
இந்த ஜோடியில் சித்தார்த் அதிரடி காட்டி தனது அரைசதம் எடுத்து வெளியேறினார். சஞ்சய் யாதவ் 14 ரன்களில் ஆட்டமிழக்க,பின்னர் பாபா அபராஜித்துடன், ராஜகோபால் சதீஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய அபராஜித் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

193 ரன்கள் சேர்ப்பு
இந்த ஜோடி எதிரணி பவுலிங்கை துவம்சம் செய்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய ராஜ கோபால் சதீஷ் 47 ரன்களும், பாபா அபராஜித் 76 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் சேர்த்தது.

கடின இலக்குடன் தொடக்கம்
தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் சார்பில் வெங்கடேஷ் 2 விக்கெட்டுகளும், தமிழ் குமரன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் களம் கண்டது. அணியின் சார்பில் சீனிவாசன் மற்றும் கமலேஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக வந்தனர்.

சீராக விழுந்த விக்.
அதில் கமலேஷ், கேப்டன் சுப்ரமணிய சிவா, வெங்கடேஷ் என சீரான இடைவெளியில் ஒவ்வொருவரும் ஆட்டமிழந்தனர். இறுதியில் எஸ்.பி. நாதன் 19 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

காஞ்சி வெற்றி
காஞ்சி வீரன்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கவுதம் தாமரை கண்ணன் 3 விக்கெட்டுகளும், சுதீஷ் 2 விக்கெட்டுகளும், ஹரிஷ், சிலம்பரசன் மற்றும் சதீஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றிபெற்றது.


Click it and Unblock the Notifications