Kane Williamson சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.. இதுவே சரியான தருணம் என வில்லியம்சன் கருத்து
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்டருமான கேன் வில்லியம்சன், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு மத்தியில் தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்துள்ளார். 35 வயதான வில்லியம்சன், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 18 ரன்கள் மட்டுமே எடுத்து, அரிதான ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் 378 போட்டிகளில் விளையாடி 19,346 ரன்கள் குவித்துள்ள இவர், நியூசிலாந்து வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக விடைபெறுகிறார். வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் விளாசியுள்ள 48 சதங்கள், நியூசிலாந்து பேட்டர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சதங்களாகும்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர், அவரது சிறப்பான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான புள்ளியாக அமைந்தது. அத்தொடரில் 578 ரன்கள் குவித்ததோடு, நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டி வரை வழிநடத்தியதற்காக அவர் 'தொடர் நாயகன்' (Player of the Tournament) விருதை வென்றார். வில்லியம்சன் நியூசிலாந்தின் இரண்டாவது வெற்றிகரமான கேப்டனாகவும் திகழ்கிறார்.
அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து 206 போட்டிகளில் அணிக்குத் தலைமை தாங்கியுள்ள அவர், தன் அணிக்கு 107 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். மேலும், 2021 ஆம் ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி ரன்னர்-அப் இடத்தை பிடிப்பதற்கும் இவரது தலைமையே முக்கியக் காரணமாக இருந்தது. கேப்டனாக வில்லியம்சன் 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டியில் அணியை வரலாற்று வெற்றிக்கு வழிநடத்தி இருக்கிறார்.
"ஓய்வு பெற இதுவே சரியான தருணம்" - கேன் வில்லியம்சன்
தனது சொந்த விருப்பத்தின் பேரில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவது குறித்து கேன் வில்லியம்சன் திருப்தி தெரிவித்துள்ளார். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த ஆல்-ஃபார்மட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வில்லியம்சன், 48.12 என்ற வியக்கத்தக்க ஒட்டுமொத்த சராசரியுடன் தனது சர்வதேச பயணத்தை நிறைவு செய்கிறார்.
"இதைப்பற்றி நான் சில காலமாக யோசித்து வந்தேன், ஆனால் கடந்த சில நாட்களாக இப்போதுதான் சரியான நேரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச கிரிக்கெட் மீதான உந்துதலும் தாகமும் என்னிடம் எப்போதும் இருந்தது. நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எனது முழு பங்களிப்பை வழங்கியதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அதற்கு குறைவான அர்ப்பணிப்போடு விளையாடுவது சரியாக இருக்காது. எனது சொந்த விருப்பத்தின் பேரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்" என்று வில்லியம்சன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளர் ராப் வால்டர் புகழாரம்
நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் கேன் வில்லியம்சனைப் புகழ்ந்தார், "கேன் வில்லியம்சனுடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்ற எவரும் அவர் எவ்வளவு சிறப்பான வீரர் மற்றும் மனிதர் என்பதை புரிந்துகொள்வார்கள். அவருடன் இணைந்து பணியாற்றிய காலம் மிகக் குறைவானது என்றாலும், அவரது செயல்பாடுகளை உற்று நோக்குவதும், அணி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு குறித்த அவரது கருத்துக்களைப் பகிர்வதைக் கேட்பதும் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.
அவரது புள்ளிவிவரங்களும் பேட்டிங் திறமையும் , அவரின் தாக்கத்திற்கான சான்றுகளைத் தருகின்றன. ஆனால், இந்த நியூசிலாந்து அணிக்கும், உலக கிரிக்கெட்டிற்கும் அவர் என்னவாக இருந்தார் என்பதே அவரது சாதனையாக என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று கூறியுள்ளார்.துரதிர்ஷ்டவசமாக, வில்லியம்சனின் கடைசி சர்வதேச போட்டி தோல்வியிலேயே முடிந்தது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications

