பதிலடி கொடுத்த நியூசிலாந்து.. கேன் வில்லியம்சன் அபார சதம்.. ஃபாலோ ஆன் பெற்று நியூசி. சாதனை
வெல்லிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்துள்ளது. முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியை வெல்லும் முனைப்புடன் நியூசிலாந்து உள்ளது.
எனினும் வெல்லிங்டனில் நடைபெற்ற 2வது டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஹாரி புருக்ஸ், ஜோ ரூட் அபார சதம் விளாசினர்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில 435 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் நியூசிலாந்து விளையாடியது.

டிம் சௌதி அபாரம்
இதில் வில்லியம்சன் 4 ரன்களிலும், வில் யங் 2 ரன்களிலும் , கான்வே டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் டிம் சௌதி அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து நியூசிலாநது அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஃபாலோ ஆன்
இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணி ஒரு மிகப் பெரிய தவறை செய்தது. 226 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், நியூசிலாந்துக்கு பென் ஸ்டோக்ஸ் பாலோ ஆன் கொடுத்தார். இதனையடுத்து, 2வது இன்னிங்சில் கடும் நெருக்கடியில் நியூசிலாந்து அணி களமிறங்கியது.இதில் முதல் விக்கெட்டுக்கு டாம் லாத்தம் மற்றும் கான்வே ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

வில்லியம்சன் சதம்
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 149 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். வில் யங் 8 ரன்களில் வெளியேற, அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் தாம் ஏன் உலகத்தர வாய்ந்த வீரர் என்பதை நிரூபித்தார். இங்கிலாந்து பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்ட வில்லியம்சன், 132 ரன்களை விளாசினார்.

நியூசிலாந்து பதிலடி
இதே போன்று டேரல் மிட்செல் 54 ரன்களும், டாம் பிளாண்ட 90 ரன்களும் எடுத்தனர். இதன்காரணமாக நியூசிலாந்து அணி 483 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. கடைசி இன்னிங்சில் இவ்வளவு பெரிய இலக்கை எதிர்கொள்வது கடினம் என்பதால், பென் ஸ்டோக்ஸ் திட்டத்திற்கு நியூசிலாந்து தக்க பதிலடி கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications