உலகில் எந்த பேட்ஸ்மேனும் தொடாத கபில் தேவ் ரெக்கார்டு.. 131 டெஸ்ட், 184 இன்னிங்ஸ், 0 ரன் அவுட்
மும்பை: கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ பேட்டிங் சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் அசாத்திய பேட்டிங் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், ஒருமுறை கூட ரன்-அவுட் ஆனதே இல்லை. 184 இன்னிங்ஸ்களில் ஆடிய எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை செய்தது இல்லை.
தனது 16 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 131 போட்டிகளில் விளையாடிய கபில் தேவ், 184 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். ஆனால், எதிரணியின் எந்தவொரு ஃபீல்டராலும் இவரை ஒருமுறை கூட ரன்-அவுட் செய்ய முடியவில்லை. இன்றைய அதிவேக டி20 கிரிக்கெட் யுகத்தில் வீரர்கள் அடிக்கடி ரன்-அவுட் ஆவதைப் பார்க்கும் போது, கபில் தேவின் இந்த சாதனை வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஒரு பேட்ஸ்மேன் அடிக்கடி ரன் அவுட் ஆனால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை என்ற விமர்சனம் எழும். கடந்த 1970 மற்றும் 1980களின் காலகட்டத்தில் இன்றைய வீரர்களைப் போல நவீன உடற்பயிற்சிக் கூடங்களோ, பிரத்யேக உணவு ஆலோசகர்களோ கிடையாது. ஆனாலும், கபில் தேவ் தனது அசாதாரண உடற்தகுதியால் விக்கெட்டுகளுக்கு இடையே மிக வேகமாக ஓடி சாதனை படைத்தார். ஃபீல்டர் எங்கு நிற்கிறார், அவரது த்ரோ செய்யும் வேகம் எவ்வளவு என்பதை பந்து பேட்டில் பட்ட நொடியிலேயே துல்லியமாகக் கணிக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது.
ரன்-அவுட் ஆவதற்கு உடற்தகுதியை தாண்டி மற்றொரு காரணம் பேட்டர்களுக்கு இடையே தவறான புரிதல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததுதான். ஆனால், கபில் தேவ் ஒருமுறை ரன் அவுட் ஆகவில்லை என்றால் அவர் ஒவ்வொரு முறையும் ரன் ஓடும் முடிவை தெளிவாக எடுத்துள்ளார் என்பதோடு, எதிரில் ஆடும் பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன் ஓடும் முடிவுகளையும் சரியாக கணித்து இருக்கிறார் என்றே பொருள்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் பதற்றமடையாமல் நிதானமாகச் செயல்படும் கபில் தேவின் மன உறுதி மற்றும் கிரிக்கெட் அறிவுதான் அவரை 16 ஆண்டுகள் ஒருமுறை கூட ரன்-அவுட் ஆகாமல் பாதுகாத்துள்ளது. இன்றைய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கபில் தேவின் இந்த சாதனை ஒரு மிகச்சிறந்த பாடமாகும்.


Click it and Unblock the Notifications
