“இங்கிலாந்து தான் ஜெயிக்கும்.. இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு ஏன்னா.." ஜாம்பவான் கபில் தேவ் கருத்து
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்பாகப் பேசிய முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணி இன்னும் ஒரே அணியாக முழுமையாக ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றும், இங்கிலாந்துக்கே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 19 அன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இது குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசுகையில், "தற்போதைய சூழலில் இரு அணிகளுக்கும் 50-50 சதவீதம் சமவாய்ப்பு உள்ளது. ஆனால், இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்களுக்கு 51 சதவீதம் என ஒரு சிறிய சாதகம் உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாட்டைப் பார்க்கும் போது, இந்திய அணி இன்னும் ஒரே அணியாக முழுமையாக ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றே தோன்றுகிறது. இந்திய அணி ஒட்டுமொத்தமாக இணைந்து சிறப்பாகச் செயல்படத் தொடங்கினால், அவர்களுக்கு 60 சதவீதம் வரை வெற்றி வாய்ப்பு உள்ளது" என்றார்.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய கபில் தேவ், கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக கூறினார். கம்பீரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், கம்பீர் இந்திய அணிக்கு ஒரு நல்ல பங்களிப்பை வழங்கி வருவதால் அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கபில் தேவ் கூறியுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. எனவே, இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அந்த மோசமான சாதனையை முடிவுக்கு கொண்டு வருவதுடன் இந்த தொடரையும் கைப்பற்ற முடியும். சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரை இழந்த இந்திய அணிக்கு இது ஆறுதலாக அமையும்.


Click it and Unblock the Notifications
