இங்கிலாந்தில் கோலிக்கு இருக்கும் பிரச்னை..மாற்றிக்கவில்லை என்றால் எல்லாம் போச்சு.. கபில்தேவ் அட்வைஸ்
மும்பை: இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பாக செயல்படுவதற்காக பேட்டிங்கில் சில அட்வைஸ் கூறியுள்ளார் கபில் தேவ்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் வரும் ஜூன் 18ம் தேதி இந்த போட்டி நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஆக.4ம் தேதி முதல் செப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கோலியின் ஃபார்ம்
இந்த போட்டிகளுக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில் ரசிகர்களின் பார்வை கேப்டன் கோலியின் பேட்டிங்கின் பக்கம் திரும்பியுள்ளது. காரணம், டெஸ்ட் போட்டிகளில் கோலி நிலைத்து நின்று ஆடினால் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் அவர் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காதது அவரின் பேட்டிங் மீது சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

கபில் தேவ் அட்வைஸ்
இந்நிலையில் கோலிக்கு கபில் தேவ் அட்வைஸ் கூறியுள்ளார். அதில், விராட் கோலி சாந்தமாக பேட்டிங் செய்ய வேண்டும். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவர் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை காட்டக்கூடாது. ஏனென்றால் இங்கிலாந்து போன்ற களத்தில் ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் ஆடுவது எடுபடாது. அங்கு பொறுமையாக பந்தை பார்த்து நிதானமாக தான் விளையாட வேண்டும். அதன் மூலம் மட்டுமே அதிக ரன் சேர்க்க முடியும். எனவே கோலி மிகவும் பொறுமையாக, அவருக்கான நேரம் வரும் போது சிறப்பாக செயல்பட வேண்டும். அவசரப்படக்கூடாது எனக்கூறியுள்ளார்.

சிறப்பான கம்பேக்
விராட் கோலி இதுவரை 2 முறை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளார். 2014ம் ஆண்டு நடந்த முதல் சுற்றுப்பயணத்தில் விராட் கோலி 10 இன்னிங்ஸ்களில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதன் பிறகு கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப்பயணத்தில் கோலி அதிரடி காட்டினார். மொத்த 5 போட்டிகளில் விளையாடிய அவர் 593 ரன்களை குவித்தார். இதில் 2 சதமும், 3 அரைசதமும் அடங்கும்.

பெஸ்ட்
இங்கிலாந்து களம் குறித்து பேசிய கபில் தேவ், இங்கிலாந்து அணியை இங்கிலாந்து மண்ணில் சமாளிப்பது மிக கடினம் என்பதை இந்திய அணி நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சொந்த மண்ணில் அவர்கள் மிக பலமானவர்கள். அதே போல இங்கிலாந்து களத்திற்கு ஏற்றவாறு எப்படி இந்திய பவுலர்கள் செயல்படுகிறார்கள் என்பது முக்கியம். அங்கு பந்தில் ஸ்விங் மிக சிறப்பாக இருக்கும். எனவே இந்த விஷயத்தில் இந்தியாவை விட இங்கிலாந்து ஒருபடி மேல் இருக்கும் எனத்தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications