
12 போட்டிகள்
அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்தியா vs பாகிஸ்தான்
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.

மீண்டும் அஷ்வின்
இந்நிலையில், கடந்த (செப்.8) அன்று உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்திய அணியில், ரோஹித் சர்மா (wc), விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்தனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணியின் ஆலோசகர்
இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு, யாருமே எதிர்பார்க்காத நிலையில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது. இது தோனி ரசிகர்களை குதூகலம் அடையச் செய்தது. 2007ம் ஆண்டு, டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்றுக் கொடுத்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மூன்று முறை அந்த அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ளார். டி20 என்பது மிகவும் பரபரப்பு நிறைந்த களமாகும். அப்படிப்பட்ட களத்தில், இக்கட்டான நேரத்தில் பொறுமையாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் கொண்டவர் தோனி. கடந்த 2020ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் தான், இந்திய அணிக்காக மீண்டும் அவர் தனது பங்களிப்பை கொடுக்க தயாராகியுள்ளார்.

கங்குலி, ஜெய் ஷா முடிவு
எனினும், தோனி எப்படி, எதற்காக அணியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த முடிவில் முக்கிய பங்காற்றியது பிசிசிஐ தலைவர் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் தான். இவர்கள் இருவரும் தான், தோனி ஆலோசகராக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று கலந்து ஆலோசித்து முடிவெடுத்து, அதில் ஜெய் ஷா தோனியிடம் துபாயில் இந்த வாய்ப்பு குறித்து பேசி சம்மதம் வாங்கினார். அதேபோல், இந்திய கோச் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி என இருவரின் சம்மதத்தையும் பெற்றவர் ஜெய் ஷா தான்.

ரவிக்கும் உடம்பு சரியில்ல
இந்நிலையில், தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், "இது ஒரு நல்ல முடிவு. நான் எப்போதுமே ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்றவுடன் மூன்று-நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் இந்திய கிரிக்கெட் அமைப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் உலக கோப்பையை முன்னிட்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு சிறப்பானதாகவே தெரிகிறது. ரவியும் (சாஸ்திரி) கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், எனவே இது ஒரு முக்கியமான முடிவு என்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

நெருக்கடி சூழலில் தோனி
கபில் தேவ் சொல்வது மிகச் சரி எனலாம். ஏனெனில், உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு மாத காலம் மீதமுள்ளது. அதற்குள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி மீண்டு வந்து ஆக்டிவாக பணிபுரிய முடியும். கொரோனா பாதிப்பு வீரியம் குறைவு என்றாலும் கூட, அவருக்கு குறைந்தது 2 வாரமாவது முழு ஓய்வு அவசியம். எனினும், அவரது வயதில் அடிப்படையில் பார்த்தால், அவருக்கு குறைந்தது ஒரு மாத கால ஓய்வு அவசியம். உடல் ரீதியாகவும் சரி. மன ரீதியாகவும் சரி. எனவே, விராட் கோலி மட்டுமே அணியை நடத்த வேண்டியிருக்கும். இப்படியொரு நெருக்கடி சூழலில், கோலியுடன் தோனி உடனிருந்தால், வெற்றியோ, தோல்வியோ... தோனி உடனிருப்பது நிச்சயம் கோலிக்கு ஆயிரம் யானைகள் பலத்தை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications











