"விராட் கோலி கோபப்படாமல் உள்ளூர் போட்டிகளில் ஆடியிருக்கணும்".. ஜாம்பவான் கபில் தேவ் அதிருப்தி
மும்பை: முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவு தமக்கு அதிருப்தி அளித்ததாகவும், அவர் கோபப்படாமல் இருந்திருக்க வேண்டும் எனவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார். மேலும் கோலியின் ஆக்ரோஷமான குணத்தை டென்னிஸ் ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோவுடன் அவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
கடந்த 2025 மே மாதம் விராட் கோலி தனது 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 40 வெற்றிகளைப் பெற்றுத் தந்து, இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டனாகவும் விளங்கியுள்ளார்.

கோலியின் ஓய்வு குறித்து பேசிய கபில் தேவ், "விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இது 10,000 ரன்கள் அல்லது மைல்கற்கள் பற்றியது அல்ல. அவர் ஆறு மாதங்கள் கோபப்படாமல் அமைதியாக இருந்திருந்தால், மீண்டும் இந்திய அணிக்காக விளையாடியிருக்கக் கூடும். தேர்வுக்குழுவினர் அல்லது கேப்டன் அவரைத் தேர்வு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டுக்குச் சென்று கடினமாக உழைத்து ரன்கள் குவித்து மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்க வேண்டும். அவரிடம் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் திறன் இருக்கிறது" என்றார்.
விராட் கோலியின் ஆக்ரோஷத்தைப் பாராட்டிய கபில் தேவ், அவரை டென்னிஸ் ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோவுடன் ஒப்பிட்டார். "விராட் கோலியைப் பார்க்கும் போது எனக்கு ஜான் மெக்கன்ரோவின் நினைவுதான் வருகிறது. அவர் களத்தில் சண்டையிட்டு விளையாடினால் மட்டுமே அவரது சிறந்த ஆட்டம் வெளிப்படும்" என்று குறிப்பிட்டார். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற அமைதியான வீரர்களில் இருந்து கோலி வேறுபட்டவர் என்றும், பாகிஸ்தானின் ஜாவேத் மியான்டட் போன்ற ஆக்ரோஷமான குணம் கொண்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

