ஐபிஎல் வீரர்களுக்கு கூடுதல் சம்பளம் - கபில் தேவ் கோரிக்கை
டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கு பெரும் சம்பளம் தர வேண்டும். அதற்கு முழுத் தகுதி படைத்தவர்கள் அவர்கள் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்களைப் புறக்கணிப்பதைக் கண்டித்து கபில் தேவ் தலைமையில் முதன் முறையாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதற்குப் போட்டியாக கிரிக்கெட் வாரியம் தொடங்கிய அமைப்புதான் ஐபிஎல். இன்று ஐசிஎல் காலியாகி விட்டது. ஐபிஎல் ஓஹோவென வளர்ந்து நிற்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் வீரர்களுக்கு பெருமளவில் சம்பளம் தர வேண்டும் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு அணி மட்டுமே ரூ.1700 கோடி வரை ஏலம் போகிறது. ஆனால் வீரர்களுக்கு போதுமான சம்பளம் கொடுக்கப்படவில்லை. சம்பளத்துக்காக ரூ.35 கோடி மட்டுமே செலவிடுகிறார்கள்.
இது நியாயமில்லை. எனவே குறைந்தபட்சம் 10 சதவீத வருமானத்தை வீரர்களுக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும். வீரர்களுக்கு கூடுதலாக சம்பளம் தருவதில் என்ன தவறு உள்ளது. நான் பொறுப்பில் இருந்து இருந்தால் ரூ.100 கோடி வரை ஒதுக்கி இருப்பேன். நான் தொடங்கிய ஐ.சி.எல். அமைப்பு அரசு மற்றும் கிரிக்கெட் சங்கம் ஆதரவு இல்லாததால் வெற்றி பெறவில்லை.
அதே நேரத்தில் எனது முயற்சியை பின்பற்றி ஆரம்பித்த ஐ.பி.எல். வெற்றி பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் மற்ற விளையாட்டுகளும் முன்னேற்றத்துக்கு வர, அரசு சில சட்ட நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும் என்றார் கபில்.


Click it and Unblock the Notifications