பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடத்திய வெற்றி விழா கூட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த அணி ஐபிஎல் கோப்பை வெல்வதற்கு முன்பாகவே வெற்றி விழா நடத்துவதற்கு கர்நாடக அரசிடம் அனுமதி கோரிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது இரண்டு சந்தேகங்களை எழுப்பி உள்ளது:
ஐபிஎல் கோப்பை வெல்லப் போகிறோம் என்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு முன்பே தெரியுமா? அப்படி என்றால், ஐபிஎல் தொடரின் முடிவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் கோப்பை வென்றவுடன் மிகப் பெரிய வெற்றி விழாவை நடத்தி விட வேண்டும் என்ற அவசரம் ஏன்? இதன் பின்னணியில் வியாபார நோக்கம் உள்ளதா? ரசிகர்களைத் தங்கள் வியாபார நோக்கத்திற்குப் பயன்படுத்துவதற்காக அவசரப்பட்டு இது போன்ற மோசமான நிகழ்வு ஏற்பட்டதா? இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த இரண்டு சந்தேகங்கள் குறித்தும் விளக்கமாக இங்கே பார்க்கலாம்.

2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3 அன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டி முடிவடையும் போது நள்ளிரவு 12:00 மணி ஆகியிருந்தது. அப்போதே மறுநாள் பெங்களூரில் வெற்றி விழா நடத்தப்பட உள்ளதாகவும், பெங்களூர் அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் செல்ல உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. "எப்படி ஐபிஎல் கோப்பை வென்ற சில நிமிடங்களில் இது போன்ற ஒரு அறிவிப்பை உறுதியாக வெளியிட முடியும்?" என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளை நடத்த கால அவகாசம் தேவைப்படுமே என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே தான், ஜூன் 3 அன்று பகல் நேரத்திலேயே கர்நாடக மாநில கிரிக்கெட் அமைப்பு, அம்மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. அதில், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பை வென்றால், மறுநாள் விதான் சவுதா வாயிலில் வெற்றி விழாவை நடத்துவதற்கு டி.என்.ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சார்பாக அந்த விழாவை நடத்த உள்ளார்கள். அவர்கள் விதான் சவுதாவின் வாயிலில் வெற்றி விழா நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வார்கள்" என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன் பிறகு விதான் சவுதாவிலிருந்து அருகில் இருக்கும் சின்னசாமி மைதானத்திற்கு திறந்தவெளி பேருந்தில் செல்வதுதான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகத்தின் திட்டமாக இருந்தது.
ஆனால், இந்தக் கடிதம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. "தங்கள் அணி கோப்பை வென்றால் கர்நாடக மாநில சட்டமன்ற வாயிலில் வெற்றி விழா நடத்த வேண்டும் எனவும், ஒரு அணி நிர்வாகம் எப்படி கேட்க முடியும்? கோப்பை வென்ற பிறகு இது போன்ற கோரிக்கைகளை வைக்க முடியும். ஆனால் அதற்கு முன்பே இது போன்ற கோரிக்கை வைக்கிறார்கள் என்றால், தாங்கள் வெற்றி பெறுவோம் என்பது 100 சதவீதம் முன்பே தெரிந்திருக்க வேண்டும்," இந்தச் சந்தேகம் ரசிகர்கள் பலருக்கும் முன்பே இருந்தது.
ஐபிஎல் தொடர் துவங்கிய போது, 18-வது ஆண்டு ஐபிஎல் தொடருக்கான நினைவுப் பரிசு விராட் கோலிக்கு தான் அளிக்கப்பட்டது. அவரது ஜெர்சி எண் 18. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 18 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. இதையெல்லாம் வைத்து அந்த அணிதான் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் என அப்போதே பலரும் வேடிக்கையாகவும், சந்தேகத்துடனும் சொல்லி வந்தனர். இறுதியில் அதுதான் நடந்தும் இருக்கிறது.
ஒருவேளை தாங்கள் வெற்றி பெற்றால் அது பெரிதாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் இந்தக் கோரிக்கையை வைத்து இருக்கலாம். ஆனால், "மறுநாளே அதை நடத்தி விட வேண்டும் என்ற அவசரம் ஏன்?" என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடந்த சில விஷயங்களை உற்றுப் பார்த்தால், "ரசிகர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கமா?" என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஜூன் 3 அன்று நள்ளிரவு கோப்பையை வென்ற அடுத்த சில நிமிடங்களில், அந்த அணி சார்பில் 'சாம்பியன்ஸ்' என்ற சிறப்பு டி-ஷர்ட் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அந்த டி-ஷர்ட் இறுதிப் போட்டிக்கு முன்பே தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். "எப்படி தங்கள் அணிதான் சாம்பியன் பட்டம் வெல்லப் போகிறது என்பதை முன்பே ஊகித்து அவர்கள் அந்த டி-ஷர்ட்டை தயாரித்திருக்க முடியும்?" என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை இது '50-50' வெற்றி வாய்ப்பு என்ற வகையில். ஒருவேளை வென்றால் இதை விற்கலாம் என அவர்கள் திட்டமிட்டு இருக்கலாம்.
எந்தவொரு அணியும் தாங்கள் பெற்ற வெற்றியை வைத்து அடுத்த நிமிடத்திலிருந்தே வியாபாரம் ஆக்க வேண்டும் என நினைக்குமா?. இந்த டி-ஷர்ட் வியாபாரம் போலவே, அடுத்த நாளே பெங்களூரில் பிரம்மாண்டமான விழாவை நடத்திவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டு இருந்தது தான் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது.
எதற்காக மறுநாளே பெரும் கூட்டத்தைக் கூட்டி ஒரு விழாவை நடத்த வேண்டும்? இதன் பின்னணியில் பல்வேறு வியாபார நோக்கங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரை, அந்த அணிகள் சம்பாதிக்கும் நிகர லாபம் என்பது அவர்களுடைய முதலீட்டை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும்.
ஆனால், ஐபிஎல் அணிகளின் லாபம் என்பது அந்த அணிகளின் மதிப்பீட்டில் தான் உள்ளது. அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்பீடு என்ன, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பீடு என்ன என்பது பற்றி ஒவ்வொரு ஆண்டும் வியாபார ஆய்வு நிறுவனங்கள் சில தகவல்களை வெளியிடுவார்கள். அதுதான் அந்த அணி சார்ந்த நிறுவனத்தின் பங்குகளின் விலையை தீர்மானிக்கின்றன.
உதாரணத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றது, அதிக முறை ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது, அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளது என்பதால் விளம்பரதாரர்கள் அந்த அணிக்கு அதிக அளவில் பணம் கொடுக்க முன்வருவார்கள். மேலும், அதிக டிக்கெட்டுகளும் விற்பனையாகும். இதை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மதிப்பீடு உயரும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு ஷேரின் முக மதிப்பு (Face value) விலை 10 பைசா ஆகும். புத்தக மதிப்பு (Book Value) 13.92 ஆகும். ஆனால், ஒரு சிஎஸ்கே ஷேரின் இன்றைய சந்தை விலை 190 ரூபாயாக உள்ளது. இந்த வளர்ச்சி என்பது தான் ஐபிஎல் அணிகளுக்கு முக்கியம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏற்கனவே அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளது. அந்த அணி சரியாக ஆடாத போதும் அந்த அணியின் ரசிகர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே தான் சென்றது. ஏற்கனவே அந்த அணி நல்ல மதிப்பைப் பெற்று உள்ளது.
ஆனால், இந்த வெற்றியின் மூலம் தாங்கள் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பிற வெற்றிகரமான அணிகளையும் மதிப்பீட்டில் முந்திவிட வேண்டும் என அவர்கள் நினைத்திருக்கலாம். இந்த வெற்றி விழாவை நடத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு அதிக அளவிலான விளம்பரதாரர்களையும், ஜெர்சி போன்ற ரசிகர்களுக்கு விற்கப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தலாம் என அவர்கள் நினைத்திருக்கலாம்.
வியாபார ரீதியாக அவர்களின் எண்ணம் சரியாக இருந்தாலும், ரசிகர்களை வெறும் பணத்தை கொட்டும் இயந்திரமாக அவர்கள் பார்த்தார்களா என்ற கேள்வி உள்ளது. அப்படி பார்த்ததால் தான் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடிக்கொண்டிருந்த நேரத்தில், காவல்துறை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது என அறிவித்த பிறகும், சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா முடிந்த பிறகு ஊர்வலம் நடக்கும் என அந்த அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை வெளியிட்டு இருந்தது. அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அது.
மேலும், சின்னசாமி மைதானத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்பதற்கு டிக்கெட் விநியோகிக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பும் வெளியானது. அது குறித்த அரைகுறையான தகவல்களுடன் வெளியான அந்த அறிவிப்பால், இலவசமாக டிக்கெட் கிடைக்கும் என்ற வதந்தி பரவியது. இதெல்லாம் சேர்ந்துதான் அங்கு பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த டி.என்.ஏ. என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இன் மார்க்கெட்டிங் அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆர்சிபியை சேர்ந்த சில நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விசாரணையின் முடிவில் இது குறித்த உண்மைகள் வெளியாகும் என நம்புவோம்.