சேப்பாக்கம் நாயகனுக்கு அடித்த ஜாக்பாட்.. விரைவில் இந்திய அணியில் இடம்.. 8 ஆண்டுகளுக்கு பின் மேஜிக்
மும்பை: 2017 ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் முச்சதம் அடித்த கருண் நாயர் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளூர் போட்டிகளில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஆட்டத்தை ஆடி இருக்கிறார். இதை அடுத்து பிசிசிஐ-யின் தேர்வுக் குழு அவரை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரில் விதர்பா அணிக்காக கருண் நாயர் ஆடி வருகிறார். இதுவரை பேட்டிங்கில் அவர் 664 ரன்களை எடுத்து இருக்கிறார். இதில் 5 சதம் அடங்கும். மேலும் ஒருமுறை மட்டுமே தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார். அதனால் அவரது பேட்டிங் சராசரி 664 ஆக உள்ளது.

இதன் மூலம், இதுவரை எந்த கிரிக்கெட் பேட்ஸ்மேனும் தொடாத பேட்டிங் சராசரி சாதனையை கருண் நாயர் செய்து இருக்கிறார். அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்க வேண்டும் எனவும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கேற்ப இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கருண் நாயரை குறித்து வைத்து இருப்பதாகவும் அடுத்த சில மாதங்களில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்ததற்கு பின்பு இந்திய அணியில் சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவரை இந்திய அணி நிர்வாகம் ஏதோ ஒரு காரணத்திற்காக புறக்கணித்தது.
அதனால் சில ஆண்டுகள் மனம் உடைந்து இருந்தார் கருண் நாயர். அது பற்றி பேட்டிகளிலும் கூட பேசி இருந்தார். இந்த நிலையில், அவர் தற்போது உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வருகிறார். 2025 விஜய் ஹசாரே டிராபி தொடரில் அவர் இதுவரை எடுத்த ஸ்கோர்கள் - 112 நாட் அவுட், 44 நாட் அவுட், 163 நாட் அவுட், 111 நாட் அவுட், 112, மற்றும் 122 நாட் அவுட்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து நான்கு சதம் அடித்த சாதனையை அவர் செய்து இருக்கிறார். இதற்கு முன் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா, தென்னாப்பிரிக்காவின் அல்வீரோ பீட்டர்சன் மற்றும் இந்திய இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications