அரசியல், சமூகம்.. அதையும் தாண்டி கிரிக்கெட்டையும் நேசித்த கருணாநிதி
சென்னை : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தீவிர அரசியல்வாதியாக இருந்த போதும், கிரிக்கெட்டுக்கான தன் நேசத்தை என்றும் விட்டுக்கொடுத்ததில்லை. இது ஏதோ இன்று நேற்றல்ல, அவரின் ஆரம்பகால அரசியல் வாழ்வில் தொடங்கி அவர் கிரிக்கெட் மீது விருப்பமுள்ளவராக இருந்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை கபில் தேவ் தலைமையில் இந்திய அணி 1983 உலகக்கோப்பையை வென்றது முதல் தான் கிரிக்கெட் பிரபலமடைந்தது. அதன்பின், கிட்டத்தட்ட கிரிக்கெட் பேசாத வீடுகளே இல்லை என்ற நிலை வந்தது. ஆனால், அதற்கும் முன்பு இருந்தே கருணாநிதி கிரிக்கெட் போட்டிகளை பார்த்தும், பின் தொடர்ந்தும் வந்துள்ளார் என கூறப்படுகிறது.

எழுபதுகளில் கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவரது அமைச்சரவை குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் சண்முகம் மற்றும் மாதவன், ஆகியோரும், கருணாநிதியும் கிரிக்கெட் பற்றி பேசுவதும், சென்னையில் போட்டிகள் நடந்தால் நேரில் சென்று பார்ப்பதும் வாடிக்கை என்ற தகவல்கள் உண்டு. அப்படி கிரிக்கெட்டை அதன் பிரபலத்தன்மைக்காக அன்றி, ஒரு விளையாட்டுக் கலை என்ற அளவில் நேசித்தவர் கருணாநிதி.
எந்த அரசியல் சூழ்நிலைகளிலும், இந்தியா ஆடும் முக்கியமான கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர், யார் களத்தில் நிற்பது உள்ளிட்ட தகவல்களை பின்தொடர்ந்து கொண்டே இருப்பார் அவர். சில முக்கிய கிரிக்கெட் போட்டிகளின் போது, தன் சந்திப்புகளை கூட தள்ளி வைத்து விடுவார்.
தன் ட்விட்டர் கணக்கில் ஒருமுறை, முன்பு தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ் என்றும் தற்போது தோனி என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மட்டுமின்றி, சச்சினுடைய தீவிர ரசிகர்களில் கருணாநிதியும் ஒருவர். சச்சின் ஒய்வு பெற்ற போது பேசியதை கேட்டு தான் நெகிழ்ந்து போனதாக ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். சில வருடங்கள் முன்பு சச்சின் தன் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தை கருணாநிதி படித்து வருகிறார் என்ற செய்தி ட்விட்டரில் வந்தது.
இந்திய வீரர்களில் கருணாநிதிக்கு பிடித்த வீரர்கள் பட்டியலில் சேவாக், ஸ்ரீநாத் ஆகியோரும் உண்டு. அதே சமயம், தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடிக்கும் எந்த வீரரையும் மற்ற வீரர்களுக்காக விட்டுக்கொடுக்க மாட்டார், அவர்கள் குறித்து அதிகம் பெருமையடைவார் என்ற தகவலும் உண்டு. அப்படி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி, அஸ்வின் என பலரையும் பல நேரங்களில் பாராட்டி இருக்கிறார்.
மருத்துவ சிகிச்சைகளால் உடல் நலம் குன்றி, பின்பு சிறிது தேறிய நிலையில் இருந்த கருணாநிதி, சில மாதங்கள் முன்பு தன் கொள்ளுப்பேரனுடன் வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் ஆடிய வீடியோ ஒன்று கூட வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு கிரிக்கெட்டை நேசித்தார். தீவிர அரசியலில் தினமும் பல பிரச்சனைகளையும், சவால்களையும், போராட்டங்களையும் சந்தித்து வந்த கருணாநிதிக்கு, கிரிக்கெட் ஒரு அருமருந்தாகக் கூட இருந்திருக்கலாம்.
Story first published: Wednesday, August 8, 2018, 12:33 [IST]
Other articles published on Aug 8, 2018


Click it and Unblock the Notifications