சென்னை: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக வலம் வரும் காவ்யா மாறன், தற்போது தனது சாம்ராஜ்யத்தை இங்கிலாந்து வரை விரிவுபடுத்தியுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிரபலமான "தி ஹன்ட்ரட்" கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை சன் டிவி நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளது.
இந்த மெகா ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 100.5 மில்லியன் பவுண்ட், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹1,161 கோடி ஆகும். இந்த அதிரடி கையகப்படுத்தல் மூலம், சன்ரைசர்ஸ் குழுமம் உலக கிரிக்கெட் அரங்கில் தனது அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

சன் டிவி குழுமத்திற்கு கிரிக்கெட் அணிகளை நிர்வகிப்பது புதிதல்ல. ஏற்கனவே, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், தென்னாப்பிரிக்காவில் நடக்கும் எஸ்ஏ20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறது. சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன், இந்த அணிகளின் சிஇஓ-வாக இருந்து சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
அந்த வரிசையில், தற்போது மூன்றாவது கண்டத்தில், மூன்றாவது அணியாக நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை வாங்கியுள்ளது. இதுகுறித்து பங்குச்சந்தைக்கு அளித்த அறிக்கையில், "விளையாட்டுத் துறையில் எங்களது உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் நோக்கில், 'தி ஹன்ட்ரட்' தொடரின் ஒரு அங்கமாக இருக்கும் நார்தர்ன் சார்ஜர்ஸ் கிளப்பில் முதலீடு செய்துள்ளோம்" என்று சன் டிவி தெரிவித்துள்ளது.
நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் கடந்த நிதியாண்டு வருவாய் வெறும் ₹22 கோடி (£1.89 மில்லியன்) தான். ஆனால், சன் டிவி குழுமம் அதைவிட 53 மடங்கு அதிக விலை கொடுத்து, அதாவது ₹1,161 கோடிக்கு வாங்கியுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், இதன் பின் ஒரு வலுவான காரணம் உள்ளது.
இந்த அணி ஏற்கனவே லாபத்தில் இயங்கி வருகிறது. மேலும், 100 பந்துகள் மட்டுமே கொண்ட "தி ஹன்ட்ரட்" தொடர், உலக ரசிகர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இதன் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டே சன் டிவி இந்த முதலீட்டை செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து பணிகளும் வரும் 2025 டிசம்பர் 31-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கையகப்படுத்தல் மூலம், உலகின் பல்வேறு கிரிக்கெட் லீக்குகளில் அணிகளை வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களின் பட்டியலில் சன் டிவி இணைந்துள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள மற்ற முக்கிய நிறுவனங்கள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: மும்பை இந்தியன்ஸ் (ஐபிஎல்), எம்ஐ கேப் டவுன் (எஸ்ஏ20), எம்ஐ நியூயார்க் (எம்எல்சி), எம்ஐ எமிரேட்ஸ் (ஐஎல்டி20).
சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட்: சிஎஸ்கே (ஐபிஎல்), ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (எஸ்ஏ20), டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (எம்எல்சி).
நைட் ரைடர்ஸ் குழுமம் (ஷாருக்கான்): கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐபிஎல்), டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் (சிபிஎல்), அபுதாபி நைட் ரைடர்ஸ் (ஐஎல்டி20), லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் (எம்எல்சி).
இதன் மூலம், இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் உலக கிரிக்கெட்டில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பது தெளிவாகிறது. இனி இங்கிலாந்து மைதானங்களிலும் சன்ரைசர்ஸ் படையின் ஆரவாரத்தை எதிர்பார்க்கலாம்.