சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தவுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு உற்சாக பரிசளிக்கும் வகையில் மாலத்தீவில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன். எதற்காக இந்த திடீர் பரிசு?
2025 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியாக இருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அந்த அணியில்தான் அதிக அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தனர். எனவே அந்த அணி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, மிக மோசமாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தான் விளையாடிய முதல் எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று பரிதாபமான நிலையில் இருந்தது. மீதமிருக்கும் அனைத்து போட்டிகளிலும் வென்றால்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் இருந்தது.

இந்த நிலையில்தான், தங்களது ஒன்பதாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் வைத்தே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. இதுவரை ஆறு முறை சென்னை சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியுள்ளது. அதில் ஒரு முறை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த அணியை வீழ்த்தியதில்லை. அந்த வகையில் இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகவும் அமைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.5 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்துள்ளது. அந்த அணி தங்களின் அடுத்த போட்டியை மே இரண்டாம் தேதிதான் விளையாட உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையிலும், மீதமுள்ள ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழ்நிலை இருப்பதால், அதற்கிடையே ஒரு உற்சாகப் பயணமாகவும் மாலத்தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி வரிசையாக தோல்விகளை சந்திக்கும் போது, அந்த அணிக்கு இது போன்ற சுற்றுலாப் பயணத்தை ஏற்பாடு செய்கிறது. அதன் மூலம், வீரர்கள் தோல்விகளை மறந்து மீண்டும் உற்சாகத்துடன் வந்து விளையாடி வெற்றிகளை பெறுகிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அதை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனும் தற்போது பின்பற்றியுள்ளார். இனிவரும் போட்டிகளில் அந்த அணி வெற்றி பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம். இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வரக்கூடும். காவ்யா மாறன் சிரிக்க வேண்டும் என்பதற்காகவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற வேண்டும் என்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு சன்ரைசர்ஸ் அணியை விட காவ்யா மாறனுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.