கொச்சி: 2025 கேரள கிரிக்கெட் லீக் (KCL) தொடரில், சல்மான் நிசார் என்ற வீரர் நம்பமுடியாத, நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒரு பேட்ஸ்மேன் தனது பீஸ்ட் மோடுக்கு' சென்றால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த ஆட்டம் ஒரு சாட்சியாக இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 71 ரன்களை விளாசி, கிரிக்கெட் உலகையே தன்பக்கம் திருப்பியுள்ளார். அதிலும் 12 பந்துகளில் 11 சிக்ஸர்களை விளாசி வாயடைக்க வைத்தார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காலிகட் குளோப்ஸ்டார்ஸ் மற்றும் அதானி திருவனந்தபுரம் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் அரங்கேறியது. முதலில் பேட்டிங் செய்த காலிகட் அணி, 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போதுதான், சல்மான் நிசார் தனது விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கினார்.

போட்டியின் 19-வது ஓவரை, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் பசில் தம்பி வீசினார். அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்ஸருக்குப் பறக்கவிட்ட சல்மான் நிசார், கடைசி பந்தில் ஒரு சிங்கிள் எடுத்தார். இதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் குவிக்கப்பட்டன.
இறுதி ஓவரை அபிஜித் பிரவீன் வீசினார். அந்த ஓவரில் வீசப்பட்ட 6 சட்டப்பூர்வமான பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி, யுவராஜ் சிங்கின் சாதனையை மீண்டும் நிகழ்த்திக் காட்டினார் சல்மான் நிசார். அத்துடன் பந்துவீச்சாளர் ஒரு வைடு மற்றும் ஒரு நோ-பால் வீசியதால், அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 40 ரன்கள் கிடைத்தன.
18 ஓவர்கள் முடிவில் 13 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சல்மான் நிசார், கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 69 ரன்களை விளாசி, போட்டியின் முடிவில் 26 பந்துகளில் 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், தடுமாறிக் கொண்டிருந்த காலிகட் அணி, 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
இந்த அதிரடி ஆட்டம், போட்டியின் முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருவனந்தபுரம் அணி, கடுமையாகப் போராடியும் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் காலிகட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேரள மாநில அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் 28 வயதான சல்மான் நிசார், சமீபத்தில் துலீப் டிராபிக்கான தெற்கு மண்டல அணியிலும் இடம்பிடித்துள்ளார். அவரது இந்த அசாத்தியமான ஆட்டம், தேர்வாளர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.