மும்பை இந்திய கிரிக்கெட்டின் அதிரடி வீரர் கேதர் ஜாதவ் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 73 சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 9 சர்வதேச டி20 போட்டிகளில் கேதர் ஜாதவ் விளையாடி இருக்கிறார்.
இதில் ஒரு நாள் போட்டிகளில் இரண்டு சதம், 6 அரை சதம் உட்பட 1389 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 42 ஆகும் இருக்கிறது. அதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளில் மொத்தமாகவே அவர் 122 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 123 என்று ஆகும்.

இந்த சூழலில் 39 வயதான கேதர் ஜாதவ் தற்போது தோனி ஸ்டைலில் X தளத்தில் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கேதர் ஜாதவ், உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. மாலை 3 மணியில் இருந்து நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தோனியின் உற்ற நண்பனாக கேதர் ஜாதவ் விளங்கினார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியில் கேதர் ஜாதவ் விளையாடினார். ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வியை தழுவியதற்கு கேதர் ஜாதவ் ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டார். முக்கியமான போட்டியில் வெற்றி பெற வேண்டிய சூழலில் அவர் இறங்கி வந்து பந்தை மட்டை போட்டு ரசிகர்களை வெறுப்பேற்றினார்.
இதனால் பலவிதமான கேலி கிண்டல்களுக்கு கேதர் ஜாதவ் ஆளானார். இந்திய அணிக்காக கடைசியாக 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் விளையாடினார். மேலும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி போட்டியிலும் இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம் பெற்றிருந்தார்.
கேதர் ஜாதவ் ரசிகர்கள் கிண்டல் செய்தாலும் தன் வயதையும் பொருட்படுத்தாமல் இந்திய அணிக்கு தாமதமாக தான் காலடி எடுத்து வைத்தார். 29 வயதில் தன்னுடைய முதல் போட்டியில் கேதர் ஜாதவ் இந்திய அணிக்காக விளையாடினார். தன்னுடைய சுழற் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பில்டிங் என அனைத்திலும் கேதர் ஜாதவ் நன்றாக செயல்பட்டாலும் காயம் மற்றும் போதிய வாய்ப்பு இல்லாத காரணமாக தடுமாறினார்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 93 ஆட்டங்களில் விளையாடி 1196 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் நான்கு அரை சதமும் சராசரி 22ம் ஆகும். இது மட்டுமல்லாமல் கேதர் ஜாதவ் ரஞ்சிக்கோப்பையில் 2013- 14 ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என பெயரை பெற்றார். இது மட்டுமல்லாமல் ரஞ்சிப் போட்டியில் முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கேதர் ஜாதவ் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி, ஆர்சிபி, சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.