மும்பை: துலீப் கோப்பைக்கான தெற்கு மண்டல அணிகளுக்கான வீரர்கள் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் கேரள வீரர் ஜலஜ் சக்சேனா வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர்.
நடப்பு ஆண்டுக்கான துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்தத் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த நிலையில் துலீப் டிராபிக்கான தெற்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு அனுபவ வீரரான ஹனுமா விஹாரி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தமிழக வீரர் சாய் சுதர்சன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் ரஞ்சி டிராபி தொடரில் எலைட் பிரிவில் இடம்பெற்ற கேரள அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜலஜ் சக்சேனா தேர்வு செய்யப்படவில்லை. 7 போட்டிகளில் விளையாடிய ஜலஜ் சக்சேனா, 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் ஜலஜ் சக்சேனாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தேர்வுக் குழு தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், இந்திய கிரிக்கெட்டில் நகைப்பிற்குரிய ஏராளமான விஷயங்கள் நடந்து வருகிறது. ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான ஜலஜ் சக்சேனாவுக்கு துலீப் டிராபிக்காக தெற்கு மண்டல அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது வேடிக்கையாக இருக்கிறது. இதன் மூலம் ரஞ்சி டிராபி தொடர் தேவையில்லாதது என்று தேர்வுக் குழு நினைத்துவிட்டது போல தெரிகிறது. இது எவ்வளவு கேவலம் தெரியுமா என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் கேரள வீரர் ஜலஜ் சக்சேனா தனது வேதனையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், ரஞ்சி டிராபி தொடரில் எலைட் பிரிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர், தற்போது துலீப் டிராபிக்கான தெற்கு மண்டல அணியில் இடம்பெறவில்லை. இந்திய உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோல் நடந்திருக்கிறதா? யாரையும் குற்றம்சாட்டுவதற்காக கேட்கவில்லை. தெரிந்துகொள்வதற்காகவே கேட்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் பாபா இந்திரஜித் தேர்வு செய்யப்படாததற்கு இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.