"யாராவது பிரித்வி ஷாவுக்கு இதை காட்டுங்கள்!" சர்பராஸ் கான் செய்த செயல்.. வியந்து போன பீட்டர்சன்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் அபாரமான உடல் எடை குறைப்பை இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். சுமார் 17 கிலோ உடல் எடையைக் குறைத்து, உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி ட்ராபி தொடங்குவதற்கு முன்பாக தனது உடற்தகுதியை சர்பராஸ் கான் நிரூபித்திருப்பது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்குப் புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து, கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான், அதன்பிறகு அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறிவிட்டார். உள்ளூர் போட்டிகளில் ரன்களைக் குவித்தாலும், அவரது உடற்தகுதி குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில், ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து, தனது உடல் எடையை 17 கிலோ வரை குறைத்த புகைப்படத்தை சர்பராஸ் கான் வெளியிட்டார். இந்த புகைப்படம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கெவின் பீட்டர்சன், "இளம் வீரரின் அபார முயற்சி! மிகப்பெரும் வாழ்த்துக்கள். இது களத்தில் சிறப்பான மற்றும் நிலையான ஆட்டத்திற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் முன்னுரிமைகளை மாற்றியமைக்க நீங்கள் செலவழித்த நேரத்தை நான் பாராட்டுகிறேன். இதை யாராவது பிரித்வி ஷாவிடம் காட்டுங்கள், ப்ளீஸ். அவராலும் நிச்சயம் இது முடியும்! வலுவான உடல், வலுவான மனம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்பராஸ் கானின் இந்த உறுதியையும், கடின உழைப்பையும் கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரைப் பாராட்டி வருகின்றனர். முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாதபோது, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தார். "அவரது பெயர் அணியில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. அதிர்ச்சியளிக்கிறது. அவர் மீண்டும் வலுவாக வருவார் என்று நம்புகிறேன். அவரிடம் அந்தத் திறமை இருக்கிறது. மனம் தளர வேண்டாம், இன்று இல்லாவிட்டாலும் நாளை நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்று ஹர்பஜன் கூறியிருந்தார்.
இதற்கிடையில், ஒரு காலத்தில் இந்திய அணியின் வருங்கால நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷா, மோசமான பார்ம் மற்றும் உடற்தகுதி பிரச்சனைகள் காரணமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், அவர் சமீபத்தில் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்று, மகாராஷ்டிரா அணிக்காக விளையாட இருக்கிறார். சர்பராஸ் கானின் இந்த மாற்றத்தை ஒரு உதாரணமாகக் கொண்டு பிரித்வி ஷாவும் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பீட்டர்சன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications