For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேலோ இந்தியா குளிர்கால போட்டிகள்.. 8,700 அடி உயரத்தில் ஸ்கீயிங், பனிச்சறுக்கு.. எங்கே, எப்போது?

குல்மார்க்: இந்தியாவின் குளிர்கால விளையாட்டுத் தொடர் குல்மார்க் மலைப் பிரதேசத்தில் நடைபெற உள்ளது. லடாக்கில் ஐஸ் ஸ்கேட்டிங் உள்ளிட்ட போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது 6வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் குல்மார்க்கில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பனி மூடிய மலைகளும், பைன் காடுகளின் அமைதியும் சூழ்ந்த குல்மார்க் மைதானத்தில், இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கக் காத்திருக்கின்றனர்.

என்னென்ன போட்டிகள்?

குல்மார்க்கில் நான்கு முக்கிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. அல்பைன் ஸ்கீயிங் (Alpine Skiing), நோர்டிக் ஸ்கீயிங் (Nordic Skiing), பனிச்சறுக்கு (Snowboarding) மற்றும் மலை ஏற்றம் சார்ந்த ஸ்கீயிங் போட்டிகள் இதில் அடங்கும். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 400 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். பெரும்பாலான வீரர்கள் அல்பைன் பனிச்சறுக்கு போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். 2020ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இங்குப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவது, குல்மார்க்கை இந்தியாவின் முக்கிய குளிர்கால விளையாட்டு மையமாக மாற்றியுள்ளது.

Khelo India Winter Games 2026 Battle Begins at 8 700 Feet in Gulmarg All You Need to Know

உயரமும் சவாலும்

கடல் மட்டத்திலிருந்து 8,700 அடி உயரத்தில் குல்மார்க் அமைந்துள்ளது. இது வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இங்கு விளையாடுவது சாதாரண விஷயம் அல்ல. ஜம்முவைச் சேர்ந்த வீரர் அங்குஷ் பசாலா கூறுகையில், "இங்குப் பயிற்சிகளில் ஈடுபடும்போது கால்களை மட்டும் தயார் செய்தால் போதாது. நுரையீரலையும், பொறுமையையும் சேர்த்தே தயார் செய்ய வேண்டும்" என்றார்.

குறைந்த ஆக்சிஜன் கொண்ட உயரத்தில் மூச்சு விடுவது கடினம் என்பதால், வீரர்களுக்கு உடல் தகுதியோடு மன உறுதியும் அவசியம். செங்குத்தான சரிவுகள் மற்றும் மாறும் பனி நிலவரங்கள் வீரர்களின் திறமைக்குத் தீனி போடும்.

தென்னிந்தியாவின் ஆர்வம்

வழக்கமாகப் பனிப்பொழிவு உள்ள இமயமலைப் பகுதி மாநில வீரர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என்ற நிலை தற்போது மாறிவிட்டது. இம்முறை ஹைதராபாத், கேரளா, புனே, இந்தூர் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்தும் வீரர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். பனியைப் பார்த்தே வளராத மாநிலங்களில் இருந்து வரும் வீரர்கள், குல்மார்க்கில் விளையாடுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த முகமது சினான் கூறுகையில், "நாங்கள் பனியைப் பார்த்து வளர்ந்தவர்கள் இல்லை. ஆனால் இங்கே வந்து விளையாடும்போது ஒரு பெரிய விஷயத்தின் அங்கமாக உணர்கிறோம்" என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இந்தியாவின் ஆல்ப்ஸ்

குல்மார்க் சரிவுகள் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களுக்கு இணையாக இருப்பதாக வீரர்கள் புகழ்கின்றனர். கேலோ இந்தியா போட்டிகள் வந்த பிறகுதான் குளிர்கால விளையாட்டு வீரர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. முன்பெல்லாம் இவர்கள் இருப்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இப்போது நாடு முழுவதும் இவர்களுக்கு அடையாளம் கிடைத்துள்ளது.

பட்டம் யாருக்கு?

சொந்த மண் என்பதால் ஜம்மு காஷ்மீர் வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்லத் துடிக்கின்றனர். அதேசமயம், கடந்த முறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ராணுவ அணி, இம்முறையும் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைக்கப் போராடும். இதனால் குல்மார்க் பனிச்சரிவுகளில் அனல் பறக்கும் போட்டிகளை எதிர்பார்க்கலாம்.

சுற்றுலாத் தலமாக மட்டுமே அறியப்பட்ட குல்மார்க், தற்போது இந்தியாவின் குளிர்கால விளையாட்டு மையமாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகள், இந்தியாவின் வருங்கால பனிச்சறுக்கு நட்சத்திரங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும்.

Story first published: Thursday, February 19, 2026, 10:53 [IST]
Other articles published on Feb 19, 2026
English summary
Khelo India Winter Games 2026: The scenic town of Gulmarg is set to host the 6th edition of the Khelo India Winter Games from February 23 to 26. Following the ice skating events in Ladakh, over 400 athletes from across India, including unconventional states like Kerala and Telangana, are descending upon the snow-clad peaks for Alpine Skiing and Snowboarding.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+