"3 மாசம் தான் கெடு.. பாகிஸ்தானை விட்டே போயிடுவேன்".. வாய்ப்பு கிடைக்காத பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா
கராச்சி: பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் குஷ்தில் ஷா உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டும் பாகிஸ்தான் தேசிய அணியில் தேர்வு செய்யப்படாததால், தான் பாகிஸ்தானை விட்டே வெளியேறப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான டி20 போட்டியில் கடைசியாக விளையாடிய குஷ்தில் ஷா, அதன்பின் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் சக வீரர் அப்பாஸ் அப்ரிதியுடன் பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், "பாகிஸ்தானில் 5, 6 மற்றும் 7-வது வரிசையில் களமிறங்கி 700 முதல் 800 ரன்கள் வரை தொடர்ந்து குவித்த ஒரே வீரர் நான் தான். எனக்கு முன்னால் அதிக ரன்கள் எடுத்தவர்கள் அனைவரும் மேல்வரிசை பேட்டர்கள் மட்டுமே" என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட அப்பாஸ் அப்ரிதி, "இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே பொறுத்திருப்பேன்; அதற்குள் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பாகிஸ்தானை விட்டே செல்வேன் என்று குஷ்தில் ஷா சமீபத்தில் என்னிடம் கூறினார்" என்ற தகவலை பார்வையாளர்களுக்கு கூறினார்.
இதுகுறித்து பேசிய குஷ்தில் ஷா, "இது உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது அல்ல, என் மனதின் உண்மையான ஆதங்கம். என்னை சிலருக்குப் பிடிக்காமல் போனால் பரவாயில்லை, ஆனால் எனக்கு அநீதி இழைக்கக் கூடாது" என்று விளக்கம் அளித்தார்.
கடந்த 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான குஷ்தில் ஷா, பாகிஸ்தான் அணிக்காக 38 டி20 போட்டிகளில் 434 ரன்களும், 15 ஒருநாள் போட்டிகளில் 328 ரன்களும் எடுத்துள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிரோபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். ஆனாலும் அவருக்கு பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நன்றாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்ற சர்ச்சை சமீப காலமாக அதிகரித்துள்ளது. சில நாட்கள் முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முந்தைய போட்டியில் 8 விக்கெட் வீழ்த்திய முகமது அப்பாஸ் நீக்கப்பட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications

