கயானா: வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன், கீரான் பொல்லார்ட் 2025 கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் மிரள வைக்கும் அதிரடி ஆட்டத்தை ஆடி இருக்கிறார். டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காகக் களமிறங்கிய அவர், வெறும் 17 பந்துகளில் அரைசதம் கடந்து மைதானத்தை அதிர வைத்தார்.
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார். முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக 6-வது வீரராகக் களமிறங்கிய பொல்லார்ட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

இதில் ஐந்து பவுண்டரிகளும், ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். அவரது இந்த அதிரடி ஆட்டத்தால், நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்து 168 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் தான் உண்மையான ஆட்டமே தொடங்கியது. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் ரொமாரியோ ஷெப்பர்ட் அந்த ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் நிதானம் காத்த பொல்லார்ட், மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளை அடுத்தடுத்து சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டார்.
ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி, வெறும் 17 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். கடைசிப் பந்தையும் பவுண்டரிக்கு விரட்டி, அந்த ஓவரில் மட்டும் 20 ரன்களுக்கு மேல் குவித்தார்.
நடப்பு சிபிஎல் தொடரில் பொல்லார்ட் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இதுவாகும். முன்னதாக, செப்டம்பர் 1 ஆம் தேதி செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 65 ரன்களையும், ஆகஸ்ட் 23 ஆம் தேதி செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 65 ரன்களையும் அவர் விளாசியிருந்தார்.
இந்தப் போட்டியில், கடைசி இரண்டு ஓவர்களில் ஆண்ட்ரே ரஸ்ஸலுடன் ஜோடி சேர்ந்த பொல்லார்ட், ஆறாவது விக்கெட்டிற்கு ஆட்டமிழக்காமல் 40 ரன்களைச் சேர்த்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். ஆனால், இந்தப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தாலும் வீணானது.
2025 சிபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்ட், 8 இன்னிங்ஸ்களில் 291 ரன்களை குவித்துள்ளார். இதில் 25 சிக்ஸர்களும், 20 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம், இந்தத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
ஒரு சிபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை எவின் லூயிஸ் வசம் உள்ளது. அவர் 2021 ஆம் ஆண்டு செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக 38 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். பொல்லார்டின் தற்போதைய ஆட்டத்தைப் பார்க்கும்போது, அந்தச் சாதனையை அவர் முறியடிக்க வாய்ப்புள்ளது.