ஒரே ஓவரில் 6,4,2,6,6,6 பொளந்த பொலார்ட்.. ILT20 தொடரில் தெறிக்கவிட்டு அபாரம்
அபுதாபி: சர்வதேச லீக் டி20 போட்டியின் எம்ஐ எமிரேட்ஸ் கேப்டன் பொல்லார்ட், அபுதாபியில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக அதிரடி காட்டினார். நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் வகார் சலம்கில் பந்துவீச்சில், ஒரு ஓவரில் 30 ரன்களை விளாசி அசத்தினார்.
ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் விளாசினார் பொல்லார்ட். இதில் ஒரு பவுண்டரி, ஐந்து சிக்ஸர்கள் அடங்கும். எம்ஐ எமிரேட்ஸ் 123 ரன்கள் இலக்கை 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு எட்டிப் பிடிக்க உதவியது.

சலம்கில் பந்துவீச்சில், பொல்லார்ட் முதலில் சிக்ஸர், பின்னர் பவுண்டரி, தொடர்ந்து இரண்டு ரன்கள் எடுத்தார். கடைசி மூன்று பந்துகளிலும் தலா ஒரு சிக்ஸர் அடித்து அந்த ஓவரை 30 ரன்களுடன் முடித்தார்.தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்த சலம்கில், பொல்லார்டின் இந்த அதிரடிக்கு முன் வரை முதல் மூன்று ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
ஆனால், நான்கு ஓவர்கள் முடிவில் விக்கெட் வீழ்த்தாமல் 43 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.சனிக்கிழமை பொல்லார்ட் அடித்த ஐந்து சிக்ஸர்களுடன், அவரது டி20 மொத்த சிக்ஸர்கள் 730 போட்டிகளில் 980 ஆக உயர்ந்தது. கிறிஸ் கெய்லுக்குப் பிறகு 1000 சிக்ஸர்கள் மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 20 சிக்ஸர்களே தேவை.
"யுனிவர்ஸ் பாஸ்" கிறிஸ் கெய்ல், 2005 முதல் 2022 வரை 463 ஆட்டங்களில் 1056 சிக்ஸர்களுடன் உலக சாதனை படைத்துள்ளார். அதிக டி20 ரன்கள் குவித்த கெய்லின் மற்றொரு சாதனையை முறியடிப்பதற்கும் பொல்லார்ட் தற்போது நெருங்கி வருகிறார்.கெய்ல் தனது டி20 கேரியல் 463 ஆட்டங்களில் 14,562 ரன்களுடன் முடித்தார். அதேசமயம், பொல்லார்ட் 14,419 ரன்கள் வைத்துள்ளார். 'யுனிவர்ஸ் பாஸை' முந்திச் செல்ல அவருக்கு இன்னும் 144 ரன்கள் தேவை.


Click it and Unblock the Notifications