'தூம் பஞ்சாபி'.. எமிரேட்ஸ் சுற்றில் ஒரு போட்டியிலும் தோற்காத கிங்ஸ் லெவன்!
துபாய்: தீம் பாட்டுக்கு ஏற்றபடிதான் கலக்கிக் கொண்டிருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அது போடும் தூம்.. தூர தேசங்களையும் தாண்டி அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு அபாரமான வெற்றி முழக்கத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான் விளையாட வேண்டிய அனைத்துப் போட்டிகளிலும் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் அசரடித்துள்ளது.
கடைசியாக நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை அபாரமான பந்து வீச்சாலும், பின்னர் பேட்டிங்காலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது.
இத்தனைக்கும் நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் சரியாக விளையாடவில்லை. 6 பந்துகளைச் சந்தித்து 6 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால் சந்தீப் சர்மாவின் அபாரமான பந்து வீச்சு மற்றும் ஷேவாக்கின் சிறப்பான பேட்டிங்கால் வெற்றியை ஈட்டியது பஞ்சாப்.
பஞ்சாப் அணியின் தொடர் வெற்றியால் அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா படு உற்சாகமாக காணப்படுகிறார்.

பஞ்சாப்பு.. டாப்பு...
இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தொடரில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடி வருகிறது. மேக்ஸிமம் வெற்றிகளுடன் மேக்ஸ்வெல் துணையோடு எதிராளிகளைக் கலங்கடித்து வருகிறது. புள்ளிகள் பட்டியலிலும் பஞ்சாபே முதலிடத்தில் வீற்றிருக்கிறது.

எமிரேட்ஸ் தொடரில் முழு வெற்றி
எமிரேடிஸ் தற்போது முதல் சுற்று ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் பஞ்சாபுக்கான போட்டிகள் அனைத்தையும் அது முடித்து விட்டது. மேலும் ஒரு போட்டியிலும் தோல்வியையும் அது சந்திக்கவில்லை.

சபாஷ் சந்தீப்...
நேற்றைய போட்டியில் பெங்களூர் வீரர்களை பஞ்சாபின் சந்தீப் சர்மா பிரித்து மேய்ந்து விட்டார். அவரது மாயாஜால பந்து வீச்சால் பெங்களூர் வீரர்கள் தவிடு பொடியாகி விட்டனர். அவர் வீழ்த்திய 3 விக்கெட்களுமே அபாரமானவை.

தவன் - மிட்சலுக்கு ஆளுக்கு 2
இவர் தவிர ரிஷி தவன், மிட்சல் ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர். பாலாஜிக்கும் ஒரு விக்கெட் கிடைத்தது.

திடீரென்று ஆடிய ஷேவாக்
பஞ்சாபின் பேட்டிங்கின்போது யாரும் எதிர்பாராத வகையில் ஷேவாக் பிரமாதமாக ஆடினார். 26 பந்துகளைச் சந்தித்த அவர் 32 ரன்களைக் குவித்தார்.

முதல் முறையாக 'மினிமம்வெல்'...
அதிரடி வீரர் மேக்ஸ்வெல் முதல் முறையாக நேற்று குறைந்த ரன்களில் அவுட்டானார். 6 பந்துகளைச் சந்தித்த அவர் 6 ரன்களை மட்டுமே எடுத்தார்.


Click it and Unblock the Notifications