டெல்லி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏற்கனவே தவறி விட்டது என்பது நினைவிருக்கலாம். எனவே இனியும் தொடர்ந்து மேக்ஸ்வெல் ஆடுவதில் பிரயோஜனம் இல்லை என்பதாலும் அவரை நாடு திரும்ப கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

27 வயதான மேக்ஸ்வெல் இந்தத் தொடரில் அவ்வளவாக சோபிக்கவில்லை. 11 போட்டிகளில் ஆடிய அவர் 179 ரன்கள் எடுத்துள்ளார். அவரிடம் வழக்கமான அதிரடியைப் பார்க்க முடியவில்லை ரசிகர்கள்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் இதுவரை 12 போட்டிகளில் ஆடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறத் தவறி விட்டது. தற்போது புள்ளிகள் பட்டியலில் இந்த அணி 7வது இடத்தில் உள்ளது. முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் மட்டுமே பிளே ஆப் பிரிவுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டித் தொடரை விட்டு வெளியேறும் 5வது ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல். இதற்கு முன்பு பஞ்சாபைச் சேர்ந்த ஷான் மார்ஷ், புனே அணியைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் மார்ஷ், கொல்கத்தா நைட் ரைடர்ஸைச் சேர்ந்த ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆகியோரும் காயம் என்று கூறி வெளியேறி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
ஆஸ்திரேலிய அணி விரைவில் மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் செல்லவுள்ளது. அதை மனதில் கொண்டும் மேக்ஸ்வெல் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.