லண்டன்: ஐபிஎல் தொடருக்கு பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் இல்லாததன் காரணமாக இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளனர். வழக்கமாக பிரித்வி ஷா, சாய் சுதர்சன் உள்ளிட்டோர் செல்லும் நிலையில், இம்முறை கேகேஆர் அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் லாங்கஷைர் அணிக்காக களமிறங்கியுள்ளார்.
அதிலும் கேகேஆர் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர் பில் சால்ட், இந்த வாய்ப்பினை வெங்கடேஷ் ஐயருக்கு பெற்று கொடுத்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லாங்கஷைர் அணிக்கு எதிரான போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லாங்கஷைர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை விளாசியது.

நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 25 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதன்பின் களமிறங்கிய வோர்செஸ்டர்ஷைர் அணி48 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை சேர்த்திருந்தது. கடைசி 12 பந்துளைல் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவாகியது. அப்போது 49வது ஓவரை வீச வெங்கடேஷ் ஐயர் அழைக்கப்பட்டார். இவர் வீசிய முதல் பந்தே பவுண்டரியாக விளாசப்பட, 2வது பந்தில் பவுண்டரி பறந்தது.
இதுமட்டுமல்லாமல் அடுத்த பந்துகளில் 2 ஒய்டுகள் மற்றும் 2 ரன்களையும் விட்டுக் கொடுத்தார். இதன் மூலமாக 4 பந்துகளில் 12 ரன்களை வெங்கடேஷ் ஐயர் விட்டுக் கொடுத்ததால், வோர்செஸ்டஷைர் அணியின் வெற்றிக்கு 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அப்போது சிக்சர் அடிக்க முயன்று அதிரடி வீரர் ஹிங்லி கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வந்த டார்லி வெங்கடேஷ் ஐயரின் ஸ்லோயர் யார்க்கரை கணிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெங்கடேஷ் ஐயர் லாங்கஷைர் அணியை வெற்றிபெற வைத்தார். ஐபிஎல் தொடரிலேயே சிறந்த ஃபார்மில் இருந்த வெங்கடேஷ் ஐயர், தற்போது கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் அபார திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் ஹர்திக் பாண்டியா இல்லாத நேரத்தில் சிவம் துபேவை பயன்படுத்தி வரும் இந்திய அணி நிர்வாகம், விரைவில் வெங்கடேஷ் ஐயர் பக்கம் திரும்ப வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணிக்காக சில போட்டிகளில் வெங்கடேஷ் ஐயர் விளையாடி இருந்தாலும், நடப்பாண்டில் வெங்கடேஷ் ஐயரின் ஆட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.