ஐபிஎல் கோப்பை வென்றபோது கூட இப்படி அழவில்லை.. டிரஸ்ஸிங் ரூமில் கதறி அழுத KKR வீரர்கள்.. வருண் தகவல்
கொல்கத்தா: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்குப் பிறகு கொல்கத்தா அணியின் டிரஸ்ஸிங் ரூமில் பல வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுத சம்பவம் தற்போது வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றபோது கூட இப்படி ஒரு உணர்ச்சிகரமான தருணம் நடக்கவில்லை என தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார். அப்படி அங்கு என்னதான் நடந்தது?
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சந்தித்த மோசமான தொடக்கம் வேறு எந்த அணிக்கும் நடந்திருக்காது. முதல் 6 போட்டிகளில் ஒரு வெற்றி கூட இல்லாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் அந்த அணி தத்தளித்து வந்தது. மழையால் ரத்தான ஒரு போட்டியின் மூலம் கிடைத்த 1 புள்ளி மட்டுமே அந்த அணியிடம் இருந்தது. இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா களமிறங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானை 155 ரன்களுக்குள் சுருட்டிய கொல்கத்தா அணி, பேட்டிங்கில் 7 வது விக்கெட்டுக்கு சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து அபார வெற்றி பெற்றது. இதில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
போட்டி முடிந்த பின் பேசிய வருண் சக்கரவர்த்தி, "இந்த வெற்றி எங்களுக்கு மிக மிக முக்கியமானது. இன்று டிரஸ்ஸிங் ரூமில் பல வீரர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டதை நான் பார்த்தேன். 2024 ஆம் ஆண்டு நாங்கள் ஐபிஎல் கோப்பையை வென்ற போது கூட இவ்வளவு உணர்ச்சிகரமாக யாரும் அழவில்லை. வெளியில் இருந்து எங்கள் மீது எவ்வித அடிப்படையும் இல்லாத கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், அந்த விமர்சனங்கள் எங்களை பாதிக்காதவாறு பார்த்துக் கொண்ட பயிற்சியாளர் குழுவுக்குத் தான் முக்கியப் பங்கு சேரும். இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு ஒரு வலுவான கட்டமைப்பு தேவைப்பட்டது, அது எங்களிடம் இருந்தது" என உருக்கமாகத் தெரிவித்தார்.
கொல்கத்தா அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் காயம் தான். ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், பதிரானா மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்ற முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் அந்த அணி தவித்தது. புதிய தலைமை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மீது சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவரே அணியை மீட்டெடுத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய வருண், "தொடர் தொடங்கும் முன்பே பல காயங்கள் எங்களை முடக்கிவிட்டன. இப்படிப்பட்ட ஒரு கடினமான சூழலில் அணியை வழிநடத்த அதிக தைரியம் வேண்டும். அதை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் சிறப்பாகச் செய்தார். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளோம்" என நம்பிக்கை தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Click it and Unblock the Notifications