கொல்கத்தா: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் அவுட் ஆன விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஃபின் ஆலன் மற்றும் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆட்டத்தின் 2வது ஓவரை லக்னோ வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஃபின் ஆலன் அடித்த பந்து டீப் தேர்ட் மேன் திசையில் காற்றில் பறந்தது. அங்கு பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் நின்ற திக்வேஷ் ரதி பந்தை கேட்ச் பிடித்தார். ஆனால் அவர் கேட்ச் பிடிக்கும் போது தடுமாறிய அவரது இடது கால் பவுண்டரி எல்லைக்கோட்டை லேசாக தொட்டது.

பவுண்டரி எல்லையில் பிடிக்கப்படும் கேட்ச்களை 3வது அம்பயர் பல கோணங்களில் ஆராய்ந்து முடிவு வழங்குவது வழக்கம். அதன்படி 3வது அம்பயர் இதனை பரிசோதித்து சரியான கேட்ச் என கூறி அவுட் கொடுத்தார். இதனால் 8 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த ஆலன் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
ஆனால், பின்னர் காட்டப்பட்ட ரீப்ளேக்களில் திக்வேஷ் ரதியின் இடது கால் பவுண்டரி குஷனில் படுவது மிகத் தெளிவாக தெரிந்தது. பந்து கையில் இருக்கும் போது பவுண்டரி லைனில் கால் பட்டால் அது சிக்சர் என அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்பயர்களின் கவனக்குறைவான முடிவால் ஃபின் ஆலன் அவுட் ஆக்கப்பட்டுள்ளார்.
அம்பயர்களின் இந்த முடிவை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் அம்பயர்களின் மோசமான செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரீப்ளேயில் கால்கள் படுவது தெரிந்தும், பேட்ஸ்மேனை ஏன் அம்பயர்கள் வெளியேற்றினார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்குரிய விக்கெட்டுக்கு பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் பொறுப்பாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.