சண்டிகர்: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருக்கிறது. கிட்டத்தட்ட சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் எப்படி கேகேஆர் அணி ஆதிக்கம் செலுத்தியதோ, அதுபோன்ற இந்த ஆட்டத்திலும் பவுலர்கள் மூலம் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. அதிலும் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் இருவரும் பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டரை மொத்தமாக வீழ்த்தி உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால் கடந்த சீசனில் கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். ஆனாலும் அவர் அந்த அணியால் ரீடெய்ன் செய்யப்படவில்லை. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயமாக கேகேஆர் அணிக்கு பதிலடி கொடுப்பர் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் ரிவென்ஜ் என்றால் என்ன என்று கேட்கும் வகையில் பஞ்சாப் அணியின் ஆட்டம் அமைந்துள்ளது. 15.3 ஓவர்களில் பஞ்சாப் அணி வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிலும் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் இருவரின் பவுலிங்கை தொடுவதற்கு பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் திணறினர்.
சிறப்பாக பவுலிங் செய்த வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதுதொடர்பாக வருண் சக்கரவர்த்தி பேசுகையில், சிறப்பாக பவுலிங் செய்தேன் என்று உணர்வு இருக்கிறது. நிச்சயமாக இந்த பிட்ச் 110 ரன்கள் அடிக்க கூடிய பிட்ச் அல்ல. இந்த பிட்சில் தாராளமாக 180 ரன்களை அடிக்கலாம். பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக தொடங்கினார்கள்.
ஆனால் ஹர்சித் ராணாவின் பவர் பிளே பவுலிங் மொத்தமாக மாற்றிவிட்டது. சுனில் நரைனுடன் விளையாடுவதற்கு மிகப்பெரிய சந்தோஷம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவர் விளையாடும் அணியில் இருப்பதே பெருமை அளிக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் இரு வகையான ஸ்பின் பவுலிங்கை முயற்சித்து வருகிறேன். அது கொஞ்சம் நன்றாக பயனளிக்கிறது.
இந்த போட்டியில் 3 மற்றும் 4 ஆகிய ஓவர்கள் பவுலிங் செய்யும் போது பந்து வழுக்கி கொண்டு சென்றது. நிச்சயமாக 190 ரன்கள் அடிக்க கூடிய பிட்ச் தான் இதுவாகும். அதேபோல் கொஞ்சம் பனிப்பொழிவு இருக்கிறது. அதனை மைதான ஊழியர்கள் நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். என்று தெரிவித்தார்.