கடைசி 4 ஓவர்களில் 34 ரன்கள்.. பாண்டிங்கால் மோசம்போன பஞ்சாப்.. கேகேஆர் வெற்றிக்கு 202 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்துள்ளது. முதல் 6 ஓவர்களில் பஞ்சாப் அணி 57 ரன்களை குவித்த நிலையில், அடுத்த 8 ஓவர்களில் 102 ரன்களை விளாசியது. இதனால் பஞ்சாப் அணி 250 ரன்களுக்கு அருகில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, கடைசி 4 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே சேர்த்து ஏமாற்றம் அளித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பஞ்சாப் அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கினார் பிரியன்ஷ் ஆர்யா.

பஞ்சாப் பவர்
அடுத்தடுத்து வைபவ் அரோரா பவுலிங்கில் பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இன்னொரு பக்கம் பிரப்சிரம் சிங் சிக்சர்களை டீல் செய்து கொண்டிருந்தார். இதனால் 5 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்களை எட்டியது. இதனால் விக்கெட் வீழ்த்த வேண்டிய தேவை என்ற சூழலில், உடனடியாக சுனில் நரைன் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
அடக்கிய சுனில் நரைன்
இதன்பின் 2 ஓவர்களாக பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அடக்கி வாசித்தனர். சுமார் 3 ஓவர்களாக பவுண்டரி அடிக்காமல் இருந்த நிலையில், திடீரென வருண் சக்கரவர்த்தி பந்தில் பிரியன்ஷ் ஆர்யா சிக்ஸ் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் கேகேஆர் அணி பஞ்சாப் அணியின் ரன் குவிப்பை சுனில் நரைன் மூலமாக கட்டுப்படுத்தியது.
பிரியன்ஷ் ஆர்யா சம்பவம்
இந்த நிலையில் 10 ஓவரை வீசிய ஹர்சித் ராணா பவுலிங்கில் 4, 6, 4 என்று விளாசி, 27 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து சுனில் நரைன் வீசிய 11வது ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் ஆட்டம் மொத்தமாக பஞ்சாப் அணி பக்கம் திரும்பியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
மிரண்டுபோன வருண்
ஆனாலும் பிரப்சிம்ரன் சிங் அட்டாக்கை தொடர்ந்தார். சக்காரியா வீசிய 13வது ஓவரில் 4, 4, 6 என்று 18 ரன்கள் விளாச, வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் 4, 4, 6, 4 என்று 19 ரன்களை விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய அவர் 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழகக், பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 161 ரன்களை குவித்திருந்தது. இதனால் ஃபினிஷிங் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயர் - மேக்ஸ்வெல் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஸ்ரேயாஸ் அதிரடி
ஆனால் வருண் சக்கரவர்த்தி பந்தில் மேக்ஸ்வெல் 7 ரன்களில் ஆட்டமிழக்க, ஆச்சரியம் அளிக்கும் வகையில் யான்சன் களமிறக்கப்பட்டார். அவர் சிக்சராக அடிப்பார் என்று ரிக்கி பாண்டிங் அனுப்பிய நிலையில், 7 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் சேர்க்க, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை சேர்த்தது.


Click it and Unblock the Notifications