IPL 2025: “ரிங்கு சிங் அவுட் ஆவதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்”.. விளாசிய சேவாக்
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் 10 பந்துகளில் 12 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த முறை அவர் அதிரடியாக விளையாடுவார், அதிக ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே அவர் சொதப்பினார். மேலும் மிடில் ஆர்டரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஆண்ட்ரே ரசல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் போனது.

அது இந்த போட்டியில் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் ரிங்கு சிங்கை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் ஆட்டம் இழந்த விதத்தை சுட்டிக்காட்டி விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் வெளியேறுவதை ரசிகர்களே விரும்புகிறார்கள் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் ரிங்கு சிங் க்ருனால் பாண்டியாவின் பந்துவீச்சில் பவுல்டு அவுட் ஆனார். அவர் அப்போது பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்திருந்தார். அதை சுட்டிக்காட்டிய வீரேந்தர் சேவாக், "இது மிகவும் மோசமான ஷாட் தேர்வு. அந்த பந்து ஷாட் அடிப்பதற்கான பந்து அல்ல. அவர் தவறான ஆட்டத்தை ஆடி இருக்கிறார். ரிங்கு சிங் ஆட்டம் இழந்ததை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அடுத்து ஆண்ட்ரே ரசல் பேட்டிங் பார்க்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.
அதாவது ரிங்கு சிங் ஆட்டத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் விரும்பவில்லை என்பதை அவர் இவ்வாறு சுட்டிக்காட்டி இருக்கிறார். ரிங்கு சிங் இனியாவது சிறப்பாக விளையாடுவாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. 175 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அணி 16.2 ஓவர்களிலேயே எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications