எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை செய்த விராட் கோலி.. மிரள வைக்கும் ரெக்கார்டு
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். இந்த ஆட்டத்தின் போது அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை கடந்து இருந்தார்.
ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை கடந்த சாதனையை விராட் கோலி 4 முறை செய்துள்ளார். அதாவது நான்கு அணிகளுக்கு எதிராக அவர் 1000 ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்கு எதிராக விராட் கோலி 1000 ரன்கள் அடித்து இருக்கிறார்.

அவருக்கு அடுத்ததாக டேவிட் வார்னர் (கொல்கத்தா, பஞ்சாப்) மற்றும் ரோகித் சர்மா (கொல்கத்தா, டெல்லி) இரண்டு அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை அடித்துள்ளனர். ஷிகர் தவான் (சிஎஸ்கே) ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களை அடித்துள்ளார்.
இந்த நான்கு வீரர்களைத் தவிர வேறு யாரும் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் 1000 ரன்கள் எடுத்ததில்லை. அந்த வகையில் விராட் கோலி நான்கு அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் குவித்து மிகப்பெரிய ஐபிஎல் சாதனையை செய்து இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் 1093 ரன்களை எடுத்து இருக்கிறார். ரோகித் சர்மா 1070 ரன்களை எடுத்து இருக்கிறார். அவர்களுக்கு அடுத்ததாக தற்போது மூன்றாவது இடத்தில் விராட் கோலி 1000 ரன்களை எட்டி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். கேப்டன் அஜிங்க்யா ரஹானே 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். ரகுவன்ஷி 22 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களை எடுத்தனர், பந்துகளை வீணடித்தனர். அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 175 ரன்களை சேஸிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக இறங்கிய பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி விரைவாக ரன் சேர்த்தனர்.
பிலிப் சால்ட் 31 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கேப்டன் ரஜத் படிதார் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். லியாம் லிவிங்ஸ்டோன் கடைசி நேரத்தில் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து மிரட்டினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications